மதுரை: ‘திருக்குறளால் மட்டுமே இளைஞர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல முடியும். மாணவர்களுக்கு திருக்குறளை கற்பிப்பது காலத்தின் கட்டாயம்’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம்குமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் 108 அதிகாரங்களில் உள்ள 1050 குறளையும் சேர்க்கவும், தேர்வுகளில் திருக்குறளில் இருந்து கேள்விகள் கேட்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத், "அனைத்திற்கும் திருக்குறளில் தீர்வு உள்ளது. இதனால் திருக்குறள் அதன் பிறப்பிடத்தை காட்டிலும் மற்ற இடங்களில் அதிகளவில் கொண்டாடப்படுகிறது. மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்கம், சகிப்பு தன்மை ஏற்பட திருக்குறளை கற்பிப்பது காலத்தின் கட்டாயம்.
இளைஞர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல திருக்குறளால் மட்டுமே முடியும். இதனால் 6 முதல் 12 வரை திருக்குறளின் அறத்துப்பால், பொருட்பாலில் உள்ள 108 அதிகாரங்களையும் கற்பிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இந்தக் குறள்களை பாடப்புத்தகத்தில கடைசியில் பெயரளவில் சேர்த்துள்ளனர். தேர்வுகளில் திருக்குறளில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை. இதற்கு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
இதையடுத்து 10 முதல் 12 வகுப்பு வரை 2022- 2023 கல்வியாண்டில் திருக்குறளின் 108 அதிகாரங்கள் சேர்க்கப்பட்டு 10 முதல் 20 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் 6 முதல் 9 வகுப்பு தேர்வுகளில் 108 அதிகாரங்களும் சேர்க்கப்பட்டு தேர்வுகளில் கேள்வி கேட்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பதிவு செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கையை 3 மாதத்தில் முடிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" இவ்வாறு உத்தரவிட்டனர்.