மதுரை | வைகை கரை நான்கு வழிச் சாலை ஆக்கிரமிப்பு - வாகன ஓட்டிகள் சிரமம்

By ஒய். ஆண்டனி செல்வராஜ்

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து ரூ.380 கோடியில் வைகை கரையில் அமைக்கப்பட்ட சாலை, ஆக்கிரமிப்புகள் காரணமாக பயன்படுத்த முடியாத நிலை உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மதுரை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சியும், மாநில நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து வைகை ஆற்றின் இரு கரைகளிலும் ரூ.380 கோடியில் பிரமாண்டமான நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. "ஸ்மார்ட் சிட்டி" திட்டத்தின் கீழ் இந்த சாலை அமைக்கப்பட்டது. எனினும், பணிகள் தற்போது வரை முழுமையாக நிறைவடையவில்லைல. 80 சதவீதம் பணிகளே நிறைவடைந்துள்ளன. ஆற்றின் கரையோரங்களில் பல இடங்களில் தனியார் ஆக்கிரமித்திருப்பதால், அந்த இடங்களில் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை. இதனால், இந்த சாலை தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே பாதியில் நிற்கிறது.

எந்த நோக்கத்திற்காக இந்த சாலை அமைக்கப்பட்டதோ அந்த நோக்கம் நிறைவடையவில்லை. நகரச் சாலைகளில் வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. வைகை கரை சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத இடங்களில் தனியார் ஆக்கிரமித்து வாகன பார்க்கிங் ஆக பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் ஆரப்பாளையம் படித்துறை சோனை கோயில் தோப்பு ஜல்லிக்கட்டு சிலை ரவுண்டானா அருகே வைகை கரை சாலையில் பந்தல் அமைத்து தனியார் விழா நடத்துகின்றனர். இது குறித்து வைகை நதி மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறுகையில், "வைகை ஆற்றை சுருக்கிதான் வைகை கரையோரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இருகரைகளிலும் சாலை அமைத்துள்ளனர். அந்த சாலை வாகன ஓட்டிகளுக்கு பயன்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. சாலை அமைக்கும் பணியும் முழுமை பெறாமல் இருக்கிறது.

இந்த சாலையில் ஒர்க் ஷாப் நிறைய உள்ளதால் பழுது பார்க்கும் வாகனங்கள் பார்க்கிங் செய்யும் இடமாக இந்த இடம் மாறி உள்ளது. இதையும் மிஞ்சக்கூடிய வகையில் கரையோரப் பகுதி மக்கள் தற்போது, வைகை கரை சாலையிலே பந்தல் அமைத்து விழாக்களை நடத்த ஆரம்பித்துள்ளனர். இவர்கள் மாநகராட்சி, உள்ளாட்சி பிரதிநிதிகளை அழைப்பதால் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வாக இருப்பதால் அதிகாரிகள் யார் நம்மை யார் கேட்பார்கள் என்ற அசாத்திய தைரியத்தில் இது போன்று சாலையை ஆக்ரமித்து விழா நடத்துகிறார்கள். வைகை ஆற்றின் கரையில் உள்ள ரோடுகள் முழுமை ஆக பயன்படும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்." என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE