பள்ளங்களில் விழுந்து உயிரிழப்பு | நெடுஞ்சாலைத் துறை மீது பழி சுமத்தப்படுகிறது: அமைச்சர் எ.வ.வேலு ஆதங்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: "மனித உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. அதை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. ஆனால், சில நேரங்களில் யாராவது எங்காவது விழுந்துவிட்டால், எங்கே விழுந்தார்கள் என்றே தெரியாமல், நெடுஞ்சாலைத் துறை மீது பழி சுமத்தப்படுகிறது" என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

சென்னை சூளைமேட்டில் நடந்துவரும் மழைநீர் வடிகால் பணிகளை பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது அவரிடம், மழைநீர் வடிகால் பள்ளங்களில் விழுந்து நிகழும் உயிரிழப்புகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலமாக பல பணிகள் நடைபெறுகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் என்பது மத்திய அரசின் நிதியிலிருந்து நேரடியாக செய்யப்படும் பணிகள். அதேபோல் மாநில நெடுஞ்சாலை, மாவட்ட முக்கிய சாலை, மாவட்ட சாலைகள் மற்றும் கிராம சாலைகளை தரம் உயர்த்துவது என 4 வகையான பணிகளை தமிழக அரசு செய்துவருகிறது.

சாலைகளில் பணி செய்வதாக இருந்தாலும், மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்வதாக இருந்தாலும் சாலை பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தடுப்புகள் அமைத்து, எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுத்தான் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். முறையாக இதைதான் செய்ய முடியும்.

எனவே, பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சில நேரங்களில் பொதுமக்களே தடுப்புகளை எல்லாம் தாண்டிச் செல்வது போன்ற செயல்களில் ஈடுபடும்போது என்ன செய்ய முடியும்? பணிகள் நடைபெறுகின்ற இடங்களை எல்லாம் நாங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள்தான் கொண்டுவர முடியுமே தவிர, தடுப்புகளை கடந்து செல்பவர்களை ஒன்றும் செய்வதற்கு இல்லை.

மனித உயிர் என்பது விலைமதிக்க முடியாதது. அதை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. அந்த அடிப்படையில்தான் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரும் கூறியிருக்கிறார். ஆனால், சில நேரங்களில் யாராவது எங்காவது விழுந்துவிட்டால், எங்கே விழுந்தார்கள் என்றே தெரியாமல், நெடுஞ்சாலைத் துறை பள்ளத்தில் விழுந்ததாக இத்துறை மீது பழிபோடுவது உண்டு. எங்களைப் பொறுத்தவரை, நெடுஞ்சாலைத் துறை சார்பில் பாதுகாப்புடன் பணிகள் செய்யப்படுகிறது. இனிவரும் காலங்களில் மேலும் பாதுகாப்புடன் பணியாற்ற நெடுஞ்சாலைத் துறைக்கு உத்தரவிடுவேன்" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்