“முன்பு லத்தி அடியால் பயம் இருந்தது. இப்போது காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன” - அண்ணாமலை

By கி.மகாராஜன்

மதுரை: "தமிழகத்தில் காவல் துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளன. குற்றம் செய்பவர்களை அதட்டி பேசுவதற்கு கூட போலீஸார் தயங்குகின்றனர். தேவைப்படும்போது லத்தியை பயன்படுத்த தவறக் கூடாது" என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் "எனது பூத், வலிமையான பூத்" என்ற திட்டத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியது: "தமிழகத்தில் 2019 வரை இந்தி திணிக்கப்பட்டது. 1986-ல் வந்த கல்வி கொள்கையில் இந்தி மொழி கட்டாயமாக இருந்தது. மத்தியில் காங்கிரஸ், திமுக ஆட்சியில் இருந்தபோதும் இந்தி கட்டாயமாக இருந்தது. 2020-ல் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் இந்தி கட்டாயம் இல்லை. விருப்ப பாடமாகவே உள்ளது. இந்தி திணிப்பு கூடாது என்பது பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் விருப்பம்.

தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை அமல்படுத்த தொடங்கியுள்ளது. இல்லம் தேடி கல்வி என்பது புதிய கல்வி கொள்கையில் ஓர் அம்சம் தான். பெயரை மாற்றி செயல்படுத்துகின்றனர். உயர் கல்வி அமைச்சர் பொன்முடி முதலில் இந்தி வேண்டாம் என்றார். இப்போது அவர் பாஜகவின் கொள்கைக்கு வந்துள்ளார். தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் படிப்பை தமிழில் கற்பிக்க வேண்டும் என பாஜகதான் முதலில் குரல் கொடுத்தது. இப்போது தமிழக அரசு அதை அமல்படுத்தியுள்ளது. பொறியியல் படிப்பை 5 கல்லூரிகளில் 69 மாணவர்கள் மட்டுமே முழுமையாக தமிழில் கற்கின்றனர். ஒரு லட்சம் மாணவர்களில் 69 மாணவர்கள் மட்டும் தமிழில் பொறியியல் படிப்பு படித்தால் தமிழ் எப்படி வளரும்?

கோவை சம்பவம்: கோவையில் அக்டோபர் 23 காலை 4 மணிக்கு காரில் சிலிண்டர் வெடித்துள்ளது. முதலில் சிலிண்டர் வெடிப்பு என்றனர். ஆனால் பாஜக அது தீவிரவாத தாக்குதல் என்றோம். மறுநாள் மனித வெடிகுண்டு தாக்குதல் என்றோம். அக்டோபர் 25-ல் சம்பவம் நிகழ்ந்து 54 மணி நேரத்துக்கு பிறகு வழக்கு என்ஐஏக்கு மாற்றப்பட்டது. என்ஐஏ விசாரணையில் முபினின் ஐஎஸ்ஐ தொடர்பு, முபின் மனித வெடிகுண்டாக செயல்பட்டிருப்பது, 8 கோயில்களை தகர்க்க திட்டம் தீட்டியது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வந்துள்ளன. இவற்றை திமுக மறைத்தது. மே 19, அக்டோபர் 18-ல் மத்திய அரசு அனுப்பிய தகவல்களை திமுக மறைத்தது. பாஜக இவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்காவிட்டால் இறந்த முபினின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியிருப்பார்கள். கோவை சம்பவம் இந்தியாவின் பேசுபொருளாக பாஜகவே காரணம்.

காவல் துறை அதிகாரம்: தமிழகத்தில் மது, கஞ்சா புழக்கம் இளைஞர்களை சீரழித்து வருகிறது. மதுரையில் போதையில் இளைஞர்கள், கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். மது, கஞ்சா பழக்கத்தால் இளைஞர்கள் பயமில்லாமல் குற்றங்களில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். முன்பெல்லாமல் இளைஞர்கள் தவறாக நடந்து கொண்டால் போலீஸார் லத்தியை வைத்து அடிப்பார்கள். அப்போது போலீஸ் மீது பயம் இருந்தது. இப்போது போலீஸாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. போலீஸாருக்கு இயற்கையாகவே சில அதிகாரங்களை கொடுக்க வேண்டும். தேவைப்படும் போது லத்தியை பயன்படுத்த தவறக் கூடாது.

காவல் துறை சீரழிந்தால் சமுதாயமும் சீரழியும். காவல் துறையை கட்டிப்போட்டால் விளைவில் பயங்கரமாக இருக்கும். இப்போது அதட்டி பேசுவதற்கு கூட போலீஸார் பயப்படுகின்றனர். எங்கு போனாலும் வீடியோ எடுக்கின்றனர். அப்படியிருந்தால் போலீஸார் எப்படி வேலை செய்வார்கள். காவல் துறை சீர்த்திருத்தம் தொடர்பாக 2007-ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தினால் போதும், காவல் துறை சிறப்பாக செயல்படும்.

பிரதமர் வருகை: பிரதமர் மோடி இம்மாதம் 11-ம் தேதி மதியம் 1.50-க்கு விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 2.20-க்கு ஹெலிகாப்டரில் திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பட்டமளிப்பு விழா முடிந்து ஹெலிகாப்டரில் மதுரை விமான நிலையம் வரும் பிரதமர் மாலை 4.30 மணிக்கு விமானத்தில் விசாகபட்டினம் செல்கிறார்.

குஜராத் தேர்தல்: குஜராத் தேர்தலில் இதுவரை பாஜக பெற்ற இடங்களை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெறும். அங்கு 2-ம் இடத்துக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே போட்டி நிலவுகிறது. 7 தொகுதி இடைத் தேர்தலில் பல இடங்களில் காங்கிரஸ் டெபாசிட் கூட வாங்கவில்லை. குஜராத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 2, 3 சீட் கிடைப்பதே கடினம். குஜராத்தில் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் தமிழக பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். இமாச்சலப் பிரதேச தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெறும்.

சென்னை மழை: சென்னையில் பெரியளவில் மழை பெய்யவில்லை. இந்த மழைக்கே சென்னை மாநகரம் தாங்கவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் பெரிய மழை பெய்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் மக்கள் உள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வழங்கிய நிதியை முறையாக செலவிட முடியவில்லை. எவ்வளவு பணி முடிந்து என்பதில் ஆளாளாளுக்கு ஒரு கருத்து சொல்கின்றனர். மத்திய அரசின் நிதியை முறையாக செலவிட்டால் இந்நேரம் சென்னை எங்கேயோ போயிருக்கும். அமைச்சர்கள் குழப்பாமல் இருந்தால் பணிகள் சிறப்பாக நடைபெறும்” என்று அண்ணாமலை கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சினிமா

6 hours ago

மேலும்