கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பேரணி ஒத்திவைப்பு - மேல்முறையீடு செய்யத் திட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு நிபந்தனைகளுடன் பேரணி நடத்த உத்தரவிட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி 50 இடங்களில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. இதற்காக, அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் பேரணிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் அனுமதி கோரியிருந்தனர்.

ஆனால், நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) சோதனை நடத்தியதாலும், அதையொட்டி போராட்டங்கள் நடத்தப்பட்டதாலும், அசாதாரண சூழ்நிலை நிலவுவதாகத் தெரிவித்து, ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறையினர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர்.

50 இடங்களில் பேரணி: இதையடுத்து, தமிழகத்தில் 50 இடங்களில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. செப்டம்பர் மாதம் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணிக்கு காவல் துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

பேரணிக்கான ஏற்பாடுகளை ஆர்எஸ்எஸ் அமைப்பினர் செய்துவந்த நிலையில், கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் கூறி, நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த போலீஸார் அனுமதி மறுத்தனர்.

இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் சார்பில் அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு அக்டோபர் 31-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உளவுத் துறை அறிக்கையின் அடிப்படையில், தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஊர்வலம் செல்ல அனுமதி வழங்குவதாகவும், 24 இடங்களில் அனுமதி வழங்க இயலாது எனவும், மேலும் 23 இடங்களில் உள் அரங்கில் கூட்டம் நடத்தலாம் என்றும் டிஜிபி சார்பில் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களைத் தவிர்த்து, 44 இடங்களில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கலாம் என்று போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், இந்த இடங்களில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், ஆர்எஸ்எஸ் அமைப்பினரே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவித்த நீதிமன்றம், சுற்றுச்சுவர் பாதுகாப்புடன் கூடிய காலி மைதானம் அல்லது விளையாட்டு அரங்குகளில் மட்டும் பேரணி நடத்திக் கொள்ளலாம். தனிப்பட்ட நபர் அல்லது தடை செய்யப்பட்ட இயக்கங்கள் குறித்து பேசக் கூடாது. மொழி, இனம், கலாச்சாரம், ஜாதியை மையமாகக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வகையிலான கருத்துகளைக் கூறக் கூடாது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட பாடல்களையும் பாடக் கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து, பேரணிக்கு அனுமதி வழங்கியது.

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதியை நீதிமன்றம் வழங்கியதால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும், நவம்பர் 6-ம் தேதி (இன்று) நடைபெறவிருந்த பேரணியை ஒத்திவைப்பதாகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப் பின் தென்மண்டலத் தலைவர் இரா.வன்னியராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்எஸ்எஸ்) அமைப்பு சார்பில் கடந்த 97 ஆண்டுகளாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அணிவகுப்பு ஊர்வலங்களை அமைதியான முறையில் நடத்தி வருகிறோம். தமிழகத்திலும் பல ஆண்டுகளாக பேரணி நடத்தி வருகிறோம்.

நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டை முன்னிட்டும், அம்பேத்கர் பிறந்த 125-வது ஆண்டை முன்னிட்டும் இந்த ஆண்டு தமிழகத்தில் 50 இடங்களில், அக்டோபர் 2-ம் தேதி பேரணி நடத்த அனுமதி கோரி தமிழக காவல் துறையிடம் மனு அளித்தோம்.

ஆனால், காவல் துறையின் அனுமதி கிடைக்காததால், உயர் நீதிமன்றத்தை அணுகினோம். ஆனால், பேரணியை உள் அரங்கிலோ அல்லது நான்கு சுவர்களுக்குள்ளோ நடத்துமாறு நீதிமன்றம் கூறியிருப்பது ஏற்புடையதல்ல.

எனவே, இதை சட்டரீதியாக எதிர்த்து, மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். எனவே, நவம்பர் 6-ம் தேதி (இன்று) நடைபெறவிருந்த பேரணியை ரத்து செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

கல்வி

4 hours ago

மாவட்டங்கள்

5 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்