தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | அப்போதைய உள்துறை அமைச்சரையும் விசாரிக்கவும்: முத்தரசன்

By செய்திப்பிரிவு

சென்னை: உள்துறை நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள், அப்போதைய உள்துறை அமைச்சர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது செயல்பட்டது குறித்தும், விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வந்தது. இப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பல வகையான நோய்த்தாக்குதலுக்கு ஆளாகி வந்தனர். இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அரசியல் கட்சிகள் உட்பட பல அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.

கடந்த 2018ம் ஆண்டில் ஸ்டெர்லைட் ஆலையின் ஆபத்தை உணர்ந்த பல அமைப்புகள் ஒருங்கிணைந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டன இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்ற மக்கள் திரள் மீது காவல் துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பள்ளி மாணவி உட்பட 13 பேர் களத்தில் கொல்லப்பட்டனர். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்தனர். காவல்துறை தரப்பில் ஒரே ஒருவர் மட்டும் காயமடைந்தார்.

இந்த சம்பவம் பற்றி நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து, அதன் அறிக்கையை 2022ம் ஆண்டு மே மாதம் அரசுக்கு வழங்கியுள்ளது. இந்த அறிக்கையை தாமதமில்லாமல் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரித்த ஆணையம் காவல் துறையின் வரம்புமீறிய செயலையும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தையும் உறுதி செய்து, அதற்கு காரணமானவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவ ஆட்சி முறையில் உள்துறை நிர்வாகத்திற்கு பொறுப்பான முதல்வரும், அமைச்சரவையும் பெரும் முதலீட்டில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையின் எதிர்விளைவுகள் குறித்து பரிசீலித்தார்களா? மக்கள் நலன் கருத்தில் கொள்ளப்பட்டதா? நூறுநாள் போராட்டத்தின் தீவிரம் குறித்து என்ன மதிப்பீடு செய்யப்பட்டது. உள்துறை தலைமையின் வழி காட்டல் இல்லாமல், உள்ளூர் மட்ட காவல்துறையினர் அதிகார அத்துமீறலில் ஈடுபட்டார்களா? குடிமக்கள் 14 பேர் கொல்லப்பட்ட சம்பத்திற்கு காரணமானவர்கள் மீது குற்றவியல் சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற வினாக்களுக்கு ஆணை அறிக்கை விளக்கம் அளிக்கவில்லை.

துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தர வேண்டும் என அப்போதைய எதிர்கட்சித் தலைவர், இன்றைய முதல்வர் முக ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கையில் 50 சதவீதம் ஏற்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள இழப்பீட்டு தொகையை கழித்துக் கொண்டு, பாக்கி தொகை வழங்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதும் காயமடைந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு பரிந்துரையும் ஆறுதல் அளிக்கிறது.

உயிரிழந்தோர், காயமடைந்தோர் குடும்பங்களில் தலா ஒருவருக்கு அரசின் நிரந்தரப் பணியிடத்தில் பணி நியமனம் வழங்க வேண்டும். நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்பதுடன், உள்துறை நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள், அப்போதைய உள்துறை அமைச்சர் துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது செயல்பட்டது குறித்தும், விசாரிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு, தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது." என்று முத்தரசன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

இந்தியா

29 mins ago

விளையாட்டு

38 mins ago

இந்தியா

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

மேலும்