பெருக்கெடுத்து ஓடும் காவிரி | கோப்புப்படம் 
தமிழகம்

காவிரியிலிருந்து வீணாக கடலில் கலக்கும் நீரை சேமிக்க திட்டம்: அமைச்சர் துரைமுருகன் உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: காவிரியில் இருந்து வீணாக கடலில் கலக்கும் நீரைத் தடுத்து சேமிக்கும் வகையில் நீர்வளத்துறை சார்பில் விரைவில் திட்டம் தயாரிக்கப்படும் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவை மழைக்காலக் கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று காலை கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, "காவிரியில் கனமழை பெய்துவருவதால், நேற்று ஒருநாள் மட்டும் 16 டிஎம்சி தண்ணீர் கடலில் வீணாக சென்று கலந்திருக்கிறது. கடந்த 5 மாதங்களில், 535 டிஎம்சி தண்ணீர் கடலுக்கு வீணாகச் சென்று கலந்திருக்கிறது.

இந்த தண்ணீரை எல்லாம் முழுமையாக தேக்கி வைத்து பயன்படுத்துவதற்கு ஏற்ப பாசன திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். காவிரி நுழைகிற ஓகேனக்கல் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்பதால், ஏரி,குளங்களில் நீரேற்றும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தமிழக முதல்வர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோர் ஏற்கெனவே பார்வையிட்டு உறுதி அளித்துள்ளீர்கள், அந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், " காவிரியில் ஏராளமான தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. அவ்வாறு தண்ணீர் செல்லும்போது அருகில் இருக்கின்ற மாவட்டங்களுக்கு தண்ணீர் கிடைப்பது இல்லை. நீர்வளத்துறையில் ஆய்வு செய்வதற்காக ஒரு குழு இருக்கிறது. எனவே இதுதொடர்பாக அந்த குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவில் இதற்காக ஒரு திட்டம் தயாரிக்கப்படும்" என்றார்.

SCROLL FOR NEXT