விளையாட்டு குறைந்ததால் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சர் மெய்யநாதன்

By ஆர்.தினேஷ் குமார்

திருவண்ணாமலை: விளையாட்டு குறைந்துவிட்டதால் மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசினார்.

திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கம் மற்றும் அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில் 36-வது மாநில இளையோர் தடகள போட்டியின் தொடக்க விழா திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (16-ம் தேதி) நடைபெற்றது. மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் மருத்துவர் எ.வ.வே.கம்பன் தலைமை வகித்தார். மாநில இளையோர் தடகள போட்டிக்கான ஜோதியை ஆட்சியர் பா.முருகேஷ் ஏற்றி வைத்தார்.

மாநில இளையோர் தடகள போட்டியை தொடங்கி வைத்து சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில், தமிழகத்தில் இருந்து 380 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதுவரை இல்லாத வகையில், 25 தங்க பதக்கம், 22 வெள்ளி பதக்கம், 28 வெண்கல பதக்கம் என மொத்தம் 75 பதக்கங்களை பெற்று, இந்திய அளவில் 5-வது இடத்தை பிடித்து, தமிழக வீரர், வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். இதில் தடகள போட்டியில் மட்டும் 7 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் என 18 பதக்கங்களை பெற்றுள்ளனர்.

பதக்கம் பெறுவதற்காக மட்டும், விளையாட கூடாது. உடல் உறுதிக்காகவும் விளையாட வேண்டும். நாட்டில் வீதிகள் தோறும் மருத்துவமனைகள் உள்ளன. கடந்த காலங்களில் மருத்துவமனைகள் இல்லை. வீதிகள் தோறும் விளையாட்டு மைதானங்கள் இருந்தன. அனைத்து ஊர்கள் மற்றும் கிராமங்களிலும் எதாவது ஒரு விளையாட்டை விளையாடினோம். விளையாட்டு குறைந்துவிட்டதால், மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. அதேநேரத்தில் மருத்துவர்கள், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் படித்தவர்கள் உடற்பயிற்சி செய்கின்றனர், விளையாடுகின்றனர். ஒரு ஊரில் ஒரு மருத்துவமனையை மூட வேண்டும் என்றால், அந்த ஊரில் ஒரு விளையாட்டு மைதானம் இருந்தால் போதும்.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் வெற்றி பெற்ற 1,330 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ரூ.36 கோடி பரிசுத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். விளையாட்டு கட்டமைப்பு வசதி மற்றும் உபகரணங்களில் தொய்வு இருக்கக் கூடாது, தகுதி அடிப்படையில் வீரர்கள் தேர்வு இருக்க வேண்டுமே தவிர பரிந்துரையை ஏற்கக்கூடாது என 2 நேர்மையான செயல்களை கடைபிடிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில இளையோர் தடகள போட்டியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள், அசாம் மாநிலத்தில் நவம்பர் 11 முதல் 15 வரை நடைபெற உள்ள 37-வது இளையோர் தேசிய போட்டியில் பங்கேற்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்குக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர முதல்வர் மு.க.ஸ்டாலின் தயாராக உள்ளார். இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக சென்னை மாற வேண்டும் என்ற முதல்வரின் கணவை நோக்கி நாம் பயணிப்போம்” என்றார்.

முன்னதாக அவர், தேசிய கொடி மற்றும் தடகள சங்க கொடியை ஏற்றி வைத்து, வீரர் மற்றும் வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். இறுதியாக மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

3,500 வீரர், வீராங்கனைகள்: அக்டோபர் 19-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெறும் போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 3,500 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என 4 பிரிவுகளாக(ஆண் மற்றும் பெண்) போட்டி நடத்தப்படுகிறது. 100 மீட்டர் முதல் 10 ஆயிரம் மீட்டர் வரையிலான ஓட்டங்கள், குண்டு மற்றும் வட்டு எறிதல், கோல் ஊன்றி தாண்டுதல், உயரம் மற்றும் நீளம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டம் உட்பட ஆண்கள் பிரிவில் 64 வகை, பெண்கள் பிரிவில் 62 வகையான போட்டிகள் நடத்தப்படுகிறது. முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. சட்டப்பேரவைத் துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, எம்எல்ஏ சரவணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அ.பாலமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

2 முறை ஏற்றப்பட்ட தேசிய கொடி: தேசிய கொடியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஏற்றி வைப்பதற்கு முன்பாகவே, தேசிய கீதம் இசைக்கப்பட்டது சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும், தேசிய கொடியின் கயிற்றை சரியாக கட்டாததால் பறக்கவில்லை. தடகள சங்க கொடியை ஏற்ற அமைச்சர் சென்றதும், தேசிய கொடி மீண்டும் கீழே இறக்கி சரி செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அணிவகுப்பு மரியாதை ஏற்க, அமைச்சர் மீண்டும் வந்துவிட்டதால், சரி செய்வதற்கு முன்பாக, வேறு வழியின்றி, 2-வது முறையாக ஏற்றப்பட்டும், இறுதி வரை தேசிய கொடி பறக்கவில்லை.

மருத்துவ வசதி இல்லை: மாநில அளவில் நடைபெறும் போட்டியில், மருத்துவ வசதி சரியாக செய்யப்படவில்லை. இதனால், ஓட்ட பந்தயத்தில் பங்கேற்ற வீராங்கனை, தசை பிடிப்பால் அவதிப்பட்டார். அவருக்கு, மைதானத்திலேயே சிகிச்சை அளிக்க மருத்துவ குழு இல்லை. மேலும் பிரத்யேக ஸ்டேச்சர் வசதியும் இல்லை. இதனால், சக வீரர்கள், கைத் தாங்கலாக தூக்கி வந்தனர். பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம், சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அடுத்த 3 நாட்கள் நடைபெற உள்ள போட்டிக்கு பிரத்யேக மருத்துவ குழுவை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என வீரர், வீராங்கனைகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்