சென்னை: 'இந்து தமிழ் திசை' செய்தி எதிரொலியாக சென்னை கண்ணப்பர் திடல் அருகில் கைவிடப்பட்ட காப்பகத்தில் வசித்து வந்த 108 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு பெற்றுத்தர மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக பயனாளிகளின் பயோமெட்ரிக் விவரங்களை சில தினங்களுக்கு முன்பு மாநகராட்சி அதிகாரிகள் பதிவு செய்தனர்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் மேற்கு பகுதியில் உள்ள ராஜா முத்தையா சாலையோரத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 68 குடும்பங்கள் வசித்து வந்தன. இக்குடும்பங்கள் கடந்த 2002-ம் ஆண்டு அகற்றப்பட்டு, எழும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூளை, கண்ணப்பர் திடல் அருகில் உள்ள மாநகராட்சியின் வீடற்றோர் காப்பகத்தில்(கைவிடப்பட்ட கட்டிடம்) தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டனர்.
அப்போதே, அவர்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வால்டாக்ஸ் சாலையில் ஜட்காபுரம் பகுதியில் வீடுகள் வழங்கப்படும் என அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் கடந்த 20 ஆண்டுகளாக அக்குடும்பங்கள் 108 குடும்பங்களாகப் பெருகிவிட்டன. இதனால் இட நெருக்கடி ஏற்பட்டது. அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வந்தனர். இது தொடர்பாக அண்மையில் ‘இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தற்போது அவர்களுக்குச் சென்னை மாநகருக்கு உள்ளேயே வீடுகள் பெற்றுத்தர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாளிதழில் செய்தி வந்ததைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர்,ஆணையர் ஆகியோர் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மாநகராட்சி அதிகாரிகள் கள ஆய்வு செய்தனர். அதில் அங்கு வசித்து வந்த உண்மையான 108 பயனாளி குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டன. பின்னர்அவர்களுக்கு குடியிருப்பு ஒதுக்குவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் ஒதுக்குவதாக இருந்தால் பயனாளிகளின் பங்களிப்பு தொகையாக தலா ரூ.50 ஆயிரம்செலுத்த வேண்டும். அதைச் செலுத்தும் அளவுக்கு வசதி இல்லை என்று பயனாளிகள் கூறினர். வங்கிக் கடன் பெற்றுத் தருவதாகவும் கூறினோம். அதை அவர்கள் ஏற்கவில்லை. பின்னர் பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, அத்தொகையை மாநகராட்சி நிர்வாகம் வழங்க முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து, ஒரே பயனாளி வெவ்வேறு இடங்களில் வீடுஒதுக்கீடு பெறுவதைத் தடுக்கும் விதமாகப் பயனாளிகளின் பயோமெட்ரிக் விவரங்கள் மற்றும் புகைப்படங்களை மாநகராட்சி அலுவலர்கள் பதிவு செய்து வருகின்றனர். அவர்களுக்குப் பயனாளிகள் பங்களிப்பு தொகையை மாநகராட்சி வழங்கவும், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடு ஒதுக்கீடு கோரும் கருத்துருவை அவ்வாரியத்துக்கு அனுப்பவும் மாமன்றத்தின் அனுமதி கோரி விரைவில் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.