உதகை தாவரவியல் பூங்காவிலுள்ள பெரணி இல்லம் முன்பு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சிறப்பு மலர் அலங்காரம். படம்: ஆர்.டி.சிவசங்கர் 
தமிழகம்

உதகையில் 2-வது சீசனுக்காக தாவரவியல் பூங்காவில் சிறப்பு மலர் அலங்காரம்

செய்திப்பிரிவு

உதகை: நீலகிரி மாவட்டம் உதகையில் 2-வது சீசனையொட்டி, தாவரவியல் பூங்காவில் கொல்கத்தா, காஷ்மீர், பஞ்சாப், புனே உள்ளிட்ட இடங்களிலிருந்து இன்கா மேரிகோல்டு, பிரெஞ்ச் மேரிகோல்டு, ஆஸ்டர், வெர்பினா, ஜூபின், கேண்டீடப்ட், காஸ்மஸ், கூபியா, பாப்பி, ஸ்வீட் வில்லியம், அஜிரேட்டம், கிரைசாந்திமம், காலண்டுலா, சப்னேரியா உட்பட 60 வகைகளில் பல்வேறு வகையான விதைகள் பெறப்பட்டு, சுமார் 4 லட்சம் வண்ண மலர்ச்செடிகள் பாத்திகளில் நடவு செய்யப்பட்டன.

மேலும், சால்வியா, டெய்சி, டெல்பினியம், டேலியா, ஆந்தூரியம், கேலா லில்லி உட்பட 30 வகையான மலர்ச்செடிகள் நடவு செய்யப்பட்ட 15 ஆயிரம் மலர்த் தொட்டிகளை, காட்சி மாடத்தில் தோட்டக்கலைத் துறை ஊழியர்கள் அடுக்கிவைத்தனர்.

இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் 4 ஆயிரம் மலர்த் தொட்டிகளை கொண்டு பெரணி இல்லத்தின் இருபுறமும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை சுற்றுலாப் பயணிகள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

உதகையில் தாவரவியல் பூங்காவில் நேற்று திரண்ட சுற்றுலாப் பயணிகள், சிறப்பு அலங்காரத்தின் முன்பு நின்று புகைப்படங்கள் மற்றும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். பூங்கா ஊழியர்கள் கூறும்போது, "உதகை அரசு தாவரவியல் பூங்காவிலுள்ள காட்சி மாடம், சுற்றுலாப் பயணிகளுக்காக ஒரு மாதம் திறந்துவைக்கப்படும். தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக பல்வேறு மலர் ரகங்கள் கொண்ட மலர்த் தொட்டிகள் தயார்படுத்தப்பட்டுள்ளன" என்றனர்.

SCROLL FOR NEXT