திருச்சி: புதுப்பித்து திறக்கப்பட்டு 9 மாதங்களாகியும் முழு பயன்பாட்டுக்கு வராத சத்திரம் பேருந்து நிலையம்

By செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டு 9 மாதங்கள் ஆன நிலையில், உரிய பராமரிப்பு இல்லாததால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் ரூ.17.34 கோடியில் புதுப்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு டிச.31-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால், இந்தப் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு வந்து 9 மாதங்கள் ஆகியும் பயணிகள் காத்திருப்பு அறை, பொருட்கள் பாதுகாப்பு அறை, முதல் தளம் உள்ளிட்டவை இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கின்றன. பயணிகளின் வசதிக்காக பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள மின் விசிறிகள் இயக்கப்படாமல் உள்ளன. நடைபாதைகள், அருகில் உள்ள கடைக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும், மாடிப்படிகளில் குப்பை கொட்டப்பட்டு அசுத்தமாகவும் உள்ளன.

இதுகுறித்து பேருந்து நிலையத்தில் கடை நடத்தி வரும் ஒருவர் கூறுகையில், ‘‘இங்குள்ள முதல் தளம் இன்னும் பயன்பாட்டுக்கு வராததால், அங்கு சிலர் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பிக்பாக்கெட், நகை பறிப்பு போன்ற திருட்டு சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின் றன. கழிப்பறையும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. மேலும், பொது இடங்களில் புகைப்பிடிப்பது, எச்சில் துப்புவது போன்றவற்றால் பேருந்து நிலையம் நாளுக்கு நாள் அசுத்தமடைந்து வருகிறது’’ என்றார்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், ‘‘பேருந்து நிலையத்தில் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகன நிறுத்தும் இடம் அருகே உள்ள நுழைவு வாயில் பகுதி வழியாக தப்பி ஓடிவிடுகிறார்கள். எனவே, காலை, மாலை நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் அந்த வழியை அடைத்து வைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘முதல் தளத்தில் கட்டப்பட்டுள்ள உணவகத்தில் பாதுகாப்பு காரணங்கள் கருதி சமைப்பதற்கு வசதி ஏற்படுத்தவில்லை. வெளியே சமைத்து இங்கு கொண்டு வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் யாரும் வாடகைக்கு எடுக்க முன்வரவில்லை. எனவே, மாற்று ஏற்பாடு குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பொருட்கள் பாதுகாப்பு அறைக்கு டெண்டர் விடப்பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பயணிகள் காத்திருப்பு அறையை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தொடர்ந்து சுத்தமாக பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE