நவராத்திரி விழா | பத்மநாபபுரத்தில் பாரம்பரிய மன்னர் உடைவாள் மாற்றும் நிகழ்வில் தமிழக, கேரள அமைச்சர்கள்

By எல்.மோகன்

நாகர்கோவில்: திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து சுவாமி விக்ரகங்கள் இன்று ஊர்வலமாக புறப்பட்டன. அப்போது நடந்த மன்னரின் உடைவாள் மாற்றும் நிகழ்வில் தமிழக, கேரள அமைச்சர்கள் பங்கேற்றனர்.

திருவிதாங்கூர் மன்னர் ஆட்சிகாலத்தில் பத்மநாபபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் சுவாதி திருநாள் மன்னர் ஆட்சி காலத்தில் இவ்விழா கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு மாற்றப்பட்டது. நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து ஆண்டுதோறும் தேவாரக்கட்டு சரஸ்வதி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமாலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் கொண்டு செல்லப்படுவது வழக்கம். கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா கரோனா ஊரடங்கால் சமூக இடைவெளியுடன் ஆடம்பர நிகழ்ச்சி இன்றி நடைபெற்றது.

குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் இருந்து திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக நேற்று தேவாரக்கட்டு சரஸ்வதி விக்ரகம் யானை மீது பவனியாக செல்ல அதை பின்தொடர்ந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் விக்ரகங்கள் புறப்பட்டு சென்றன.

இந்த ஆண்டு பாரம்பரிய முறைப்படி போலீஸார் அணிவகுப்பு மரியாதை, நெற்றிப்பட்டம் சூடிய யானை அணிவகுக்க சுவாமி விக்ரகங்கள் புறப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்கும் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் நேற்று பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோயிலை அடைந்தது. அங்கிருந்து இன்று பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வரதி கோயிலை அடைந்தது. இதைப்போல் வேளிமலை முருகன் விக்ரகமும் வாகன பவனியாக அங்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் தேவாரக்கட்டு சரஸ்வரி, வேளிமலை முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் ஆகிய 3 சுவாமி விக்ரகங்களும் இன்று பத்மநாபபுரம் அரண்மனையை வந்தடைந்தன.

அப்போது அரண்மனை முன்பு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலர் தூவி சுவாமி விக்ரகங்களை வரவேற்று மரியாதை செய்தனர். பின்னர் பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையில் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாள் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய பூஜைகளுக்கு பின்னர் உடைவாளை அரண்மனை கண்காணிப்பாளர் அஜித்குமார், கேரள தேவசம் அமைச்சர் ராதாகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார். அதை அவர் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் வழங்கினார். அவர் குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகரனிடம் கொடுத்தார். அவர் அரண்மனை ஊழியர் சுதர்சனிடம் வழங்கியதும், அவர் உடைவாளை ஏந்தியவாறு அரண்மனை வாசலில் இருந்து வெளியே வந்தார்.

அப்போது அவரை பின்தொடர்ந்து நெற்றிப்பட்டம் சூட்டிய யானையில் வீற்றிருந்த சரஸ்வரி அம்மன், அதைத்தொடர்ந்து பல்லக்கில் முன்னுதித்த நங்கையம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றன. அந்நேரத்தில் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கரகோஷம் எழுப்பியும், மலர்தூவியும் சுவாமி விக்ரகங்களை வழியனுப்பி வைத்தனர். நிகழ்ச்சியில் கேரள பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி, தமிழக இந்து அறநிலையத்துறை அணையர் குமரகுருபரன், குமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், பத்மநாபபுரம் சார் ஆட்சியர் அலர்மேல் மங்கை, எஸ்.பி. ஹரிகிரண் பிரசாத், பாறசாலை எம்.எல்.ஏ. ஹரிந்திரன், மற்றும் ஏராளமானேர் கலந்துகொண்டனர்.

சுவாமி விக்ரகங்கள் ஊர்வலமாக சென்று இன்று மாலை குழித்துறை மகாதேவர் கோயிலை அடைகிறது. அங்கிருந்து நாளை ஊர்வலமாக புறப்பட்டு களியக்காவிளை எல்லையை அடைகிறது. அங்கு கேரள அரசு சார்பில் சுவாமி விக்ரகங்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவில் நெய்யாற்றின்கரையில் தங்கவைக்கப்படுகிறது. அங்கிருந்து புறப்பட்டு 25ம் தேதி திருவனந்தபுரம் ஆரிய சாலையை சுவாமி விக்ரகங்கள் அடைகின்றன. நவராத்திரி விழாவில் பங்கேற்ற பின்னர் விஜயதசமி முடிந்து மீண்டும் சுவாமி விக்ரகங்கள் குமரி மாவட்டம் வந்தடையவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

இந்தியா

23 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

45 mins ago

இந்தியா

53 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

58 mins ago

விளையாட்டு

1 hour ago

கருத்துப் பேழை

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்