சென்னை: கடன் செயலி மூலம் பண மோசடி செய்த கும்பலை உத்தர பிரதேசம் சென்று கைது செய்த சென்னை சைபர் க்ரைம் காவல் உதவி ஆய்வாளருக்கு காவல் ஆணையர் சங்கர் ஜிவால் மாதாந்திர நட்சத்திர காவல் விருதை வழங்கினார்.
சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீஸாரின் நற்பணியைப் பாராட்டும் விதமாக அவ்வப்போது பாராட்டு சான்றிதழ்களுடன் உரிய வெகுமதியும் வழங்கப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக கூடுதல் காவல் ஆணையர் லோகநாதன் (தலைமையிடம்) தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஒவ்வொரு மாதமும் ஆராய்ந்து, சென்னை பெருநகர காவல் துறையில் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணி செய்யும் போலீஸாரை கண்டறிந்து அவர்களது சிறப்பான பணியை மதிப்பிட்டு 'மாதத்தின் நட்சத்திர காவல் விருது' பெறுவதற்குத் தேர்ந்தெடுக்கி்றது.
அதன்படி, நட்சத்திர காவல் விருதுக்குத் தேர்வு செய்யப்படும் போலீஸாருக்கு ரூ.5,000 பண வெகுமதியுடன் தனிப்பட்ட செயல் திறன் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆகஸ்ட் (2022) மாதத்தில் சிறப்பாகவும், மெச்சத்தக்க வகையிலும் பணியாற்றியமைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் பி.பாஸ்கரன் நட்சத்திர காவல் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார். அவருக்குக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நட்சத்திர காவல் விருதை வழங்கி கவுரவித்தார்.
கடன் தருவதாக செல்போன் செயலி மூலம் பணம் பறித்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கும்பலை மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் உதவி ஆய்வாளர் பி.பாஸ்கரன், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியாணாவுக்கு சென்று கைது செய்ததால் இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.