மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

மதுரை: " நாட்டில் எளிமையாக தொழில் புரிவோர் பட்டியலில், தமிழ்நாடு 14-வது இடத்தில் இருந்து இப்போது 3-வது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. அந்த வகையில், மதுரையில் மாட்டுத்தாவணி அருகே 5 ஏக்கரில் ரூபாய் 600 கோடியில் புதிய டைடல் பார்க் அமைக்கப்படும். இதன் மூலம் பத்தாயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடைபெற்ற ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ மதுரை மண்டல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் முதல்வர் பேசியது: "சென்னை, கோவை, திருப்பூருக்கு அடுத்ததாக மதுரையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

தொழில் வளர்ச்சி என்கிறபோது அது பெரிய தொழில்கள் மட்டுமல்ல, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களையும் உள்ளடக்கியதுதான். இந்தத் தொழில்கள் மூலமாகத்தான் ஏராளமானவர்களுக்கு வேலை கிடைக்கும், பல லட்சம் குடும்பங்கள் வாழும் அந்த அடிப்படையில் இவற்றின் வளர்ச்சியை தமிழக அரசு முக்கியமானதாகக் கருதுகிறது.பாண்டியர் காலத்தில் தமிழ் வளர்த்த மதுரை, இன்று தொழில் வளர்ப்பதிலும் முன்னணியில் விளங்குகிறது. இத்தகு சிறப்புமிகு தூங்காநகரில் இவ்விழா நடைபெற்று கொண்டிருக்கிறது.

பரவலான வளர்ச்சியே பார்போற்றும் வளர்ச்சி, சமச்சீரான வளர்ச்சியே சிறப்பான வளர்ச்சி என்பதை உறுதி செய்திடக்கூடிய வகையில் கடந்த ஜனவரி மாதம் தென் தமிழகத்தில் தூத்துக்குடியில் தொழில் துறை சார்ந்த மாநாடு நடத்தப்பட்டது. இன்று மதுரையில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சார்பில் "தோள் கொடுப்போம் தொழில்களுக்கு" என்ற முழக்கத்தோடு தென்மண்டல மாநாடு மற்றும் விருதுகள் வழங்கக்கூடிய விழா மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மதுரை மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் பதிவு செய்யப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனங்களின் மூலம் 3 லட்சத்து 37 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.மதுரை சுங்கடி சேலைகள்,ஆயத்த ஆடைகள்,வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள்,மதுரை அப்பளம் ஆகியவற்றிற்கு பெயர் பெற்றது.

தமிழ்நாட்டின் தனித்தன்மையான பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. குறிப்பாக, புவிசார் குறியீடு பெற்ற 42 பொருட்களில் 18 பொருட்கள் தென்தமிழ்நாட்டைச் சார்ந்தவை. அது என்ன 18 பொருட்கள் என்று கேட்டீர்கள் என்றால்,நாகர்கோயில் கோவில் நகைகள்,ஈத்தாமொழி நெட்டை தென்னை, விருபாச்சி மலை வாழைப்பழம், சிறுமலை மலை வாழைப்பழம், பத்தமடைப் பாய்கள்,
மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டுகள், திருவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலைமிட்டாய், பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப் பூண்டு, மதுரை சுங்கடி, அலைப்பை பச்சை ஏலக்காய், கன்னியாகுமரி கிராம்பு, மலபார் மிளகு, காரைக்குடி கண்டாங்கி சேலை, ஈஸ்ட் இந்தியா லெதர், செட்டிநாடு கோட்டான் என்கின்ற பனை ஓலைக் கூடைகள் என தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வகையான பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளதை நான் இங்கு பெருமையோடு குறிப்பிட விரும்புகிறேன்.

இதுமட்டுமல்ல, புவிசார் குறியீடு பெற்ற அதை பெறுவதற்காக விண்ணப்பித்துள்ள 25 வகையான பொருட்களில்,கம்பம் பன்னீர் திராட்சை, உடன்குடி பனங்கற்கண்டு, தூத்துக்குடி மக்ரூன், சோழவந்தான் வெற்றிலை, மார்த்தாண்டம் தேன் உள்ளிட்ட 14 வகையான பொருட்கள் தென் தமிழகத்தைச் சேர்ந்தவை என்பது பெருமைக்குரிய ஒன்று. இப்பொருட்களுக்கு மிகப் பெரிய அளவில் வெளிநாடுகளில் வரவேற்பு உள்ளது என்கிற காரணத்தால், நமது உற்பத்தியாளர்களும், ஏற்றுமதியாளர்களும் அதிக அளவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு MSME நிறுவனங்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வண்ணம் மாநில அளவில் சிறந்த தொழில்முனைவோர் விருது,மாநில அளவில் சிறந்த வேளாண்சார் தொழில் நிறுவனத்திற்கான விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில்முனைவோர் விருது, மாநில அளவில் தரம் மற்றும் ஏற்றுமதி நிறுவனத்திற்கான விருது, சிறப்புப்பிரிவைச் சேர்ந்த சிறந்த நிறுவனத்திற்கான விருது என விருதுகள் என்னால் வழங்கப்பட்டுள்ளது. விருது பெற்றுள்ள நிறுவனத்திற்கும், நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும், என்னுடைய வாழ்த்துகளைத் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இந்நிறுவனங்கள் மென்மேலும் வளர்ந்து இந்திய அளவில் உலக அளவில் சிறப்பு பெற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

MSME நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கியதன் அடிப்படையில் விருது பெற்ற வங்கிகளுக்கு எனது மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதோடு, மென்மேலும் சிறந்த முறையில், அனைத்துப் பிரிவினருக்கும் கடன் வழங்கி சமச்சீரான தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை ஆன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதியும் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள குறு, சிறு, மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சொத்து பிணையில்லாக் கடன் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு கடன் உத்தரவாதத் திட்டம் (TNCGS) என்கின்ற பிரத்தியேகத் திட்டம் கடந்த மாதம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் இத்திட்டத்தின் கீழ், 81 MSME நிறுவனங்களுக்கு ரூ.20 கோடியே 13 லட்சம் கடன் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தாய்கோ வங்கி சீரமைக்கப்பட்டுள்ளது.கேர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு வர்த்தக வரவுகள் மற்றும் தள்ளுபடி தளம் தொடங்கப்பட்டுள்ளது.சிட்கோ மூலம் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெருங்குழுமத் திட்டம், குறுங்குழுமத் திட்டம் ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது,மதுரை மாவட்டம் விளாச்சேரி பொம்மைக் குழுமம்,தூத்துக்குடி ஆகாயத் தாமரைக் குழுமம்,விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மகளிர் நெசவுக் குழுமம் ஆகிய குழுமங்கள் ரூ.9 கோடியே 5 லட்சம் அரசு மானியத்துடன் ரூ.9 கோடியே 82 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமைப்பதற்கான ஆணை இன்று என்னால் வழங்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாமல்,காஞ்சிபுரம் நரிக்குறவர் பாசிமணி குழுமம், திருநெல்வேலியில் சமையல் பாத்திரக்குழுமம்,திருப்பத்தூரில் ஊதுபத்திக் குழுமம்,சேலம் மாவட்டம் தம்மம்பட்டியில் மரச்சிற்பக் குழுமம், கிருஷ்ணகிரியில் மூலப்பொருட்கள் கிடங்கு குழுமம்,ஈரோட்டில் மஞ்சள்தூள் உற்பத்திசெய்யும் குறுந்தொழில் குழுமம்,ஈரோடு மாவட்டம், பவானியில் ஜமுக்காளம் உற்பத்தி செய்யும் குறுந்தொழில் குழுமம்,ஆகிய குழுமங்களுக்கு பொது வசதி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூரில், தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் கடந்த மாதம் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மேற்கு மாவட்டங்கள் மட்டுமல்லாமல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, சிவகங்கை, இராமநாதபுரம், ஆகிய தென்மாவட்டங்களிலுள்ள கயிறுத் தொழில் நிறுவனங்கள் பயனடையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டில் எளிமையாக தொழில் புரிதல் பட்டியலில் தமிழ்நாடு 14-ஆவது இடத்தில் இருந்து, இப்போது 3-ஆவது இடத்திற்கு முன்னேறி வந்திருக்கிறது. அடுத்து முதல் இடத்தைப் பிடிப்பதே நமது இலக்கு. அதேபோல், ஸ்டார்ட் அப் இந்தியா வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் பல படிகள் முன்னேறி அரசின் சிறந்த புத்தொழில் செயல்பாடுகளுக்கான ‘லீடர்’ அங்கீகாரத்தைத் தற்போது பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டை 2030-க்குள் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிட வேண்டும் என்கின்ற இலக்கை அடைய, ஏற்றுமதி வர்த்தகம் முக்கியமாகும். எனவே ஏற்றுமதியை ஊக்குவித்து வருகிறோம்.

தொழில் வளர்ச்சிக்கு தேவையான கொள்கை சார்ந்த முடிவுகள் எடுப்பதற்கும், திட்டங்கள் வகுப்பதற்கும், MSME நிறுவனங்கள் குறித்த தரவுகள் மிக முக்கியம். எனவே, பதிவு செய்த MSME நிறுவனங்கள் குறித்த நிகர்நிலைத் தரவுகளைப் பெற, மத்திய அரசின் MSME அமைச்சகத்துடன் தமிழக அரசின் MSME துறை விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது.

சென்னை போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், புத்தொழில் வளர்ச்சி பெற வேண்டும் என்கிற நல்ல நோக்கத்தோடு, மதுரை, திருநெல்வேலி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வட்டாரப் புத்தொழில் மையங்கள் அண்மையில் என்னால் தொடங்கி வைக்கப்பட்டது. மூன்று வட்டார புத்தொழில் மையங்களில் இரண்டு தென் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஒரு முக்கியமான அறிவிப்பு ஒன்றை இந்த நிகழ்ச்சியில் நான் வெளியிட விரும்புகிறேன்.

தொழில் முனைவோர்கள் சொத்து பிணையம் கொடுத்து கடன் பெறும்போது, சொத்தின் மீது கடன் பெற்றுள்ளதை உரிமைப்பத்திரம் ஒப்படைத்து (Memorandum of Deposit of Title Deed) சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது திரும்பவும் பதிவு செய்ய வேண்டிய முறை தற்பொழுது நடைமுறையில் உள்ளது.

ஒரு சொத்தின் மீது எத்தனை முறை கூடுதல் கடன் பெற்றாலும், அத்தனை முறையும் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். இதனால் கால விரயம் ஏற்படுவதுடன் கடன் பெறுவதிலும் காலதாமதம் ஏற்படுகிறது. இந்த நடைமுறையை மாற்றி, அதே சொத்தின் மீது கூடுதல் கடன் பெறும்போது பதிவு செய்யத் தேவை இல்லை என்ற நடைமுறை கொண்டு வரப்படும்.

இத்துடன் இந்த மாநாடு நடைபெறும் மதுரையை மையப்படுத்தி, மற்றொரு மகிழ்ச்சியான அறிவிப்பையும் நான் வெளியிடுகிறேன். 2000-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் , சென்னையில் திறந்து வைத்த டைடல் பூங்கா, மாநிலத்தினுடைய தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு முன்னோடியாக திகழ்ந்து வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். தகவல் தொழில்நுட்ப புரட்சியை தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நகருக்கு எடுத்துச் செல்ல, டைடல் நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு தகவல் தொழில்நுட்ப பூங்காவை உருவாக்கியதுடன், திருப்பூர், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், சேலம், வேலூர் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் New Tidal பூங்காக்களை நமது அரசு உருவாக்கி வருகிறது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் FINTECH போன்ற அறிவு சார்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் டைடல் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து SPB மூலம் ஒரு முன்னோடி டைடல் பூங்கா அமைக்கப்படவுள்ளது. இந்த பூங்கா டைடல் லிமிட்டெட் நிறுவனத்தால், இயக்கப்பட்டு நிர்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத் தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்படும்.

முதற்கட்டமாக, ரூ.600 கோடி திட்ட மதிப்பீட்டில், ஐந்து ஏக்கரில் இது அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில், மேலும் ஐந்து ஏக்கரில் இரட்டிப்பாக்கப்படும். இந்தப் பூங்காவானது, தகவல் தொழில்நுட்பம் FINTECH மற்றும் தகவல் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன் மதுரை மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், அது வழி வகுக்கும். முதல் கட்டத்தில், 10,000 பேர் இதனால் வேலைவாய்ப்பு பெறுவர் என்று எதிர்பார்க்கிறோம்.

பொதுவாக தொழில் வளர்ச்சி என்பதை அந்த தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியாக மட்டும் நாங்கள் பார்ப்பது இல்லை. அதன் மூலமாக வேலை வாய்ப்புகள் கிடைக்கிறது. எனவே பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வளர்ச்சியாகவே நாம் பார்க்கிறோம்.அந்த வட்டாரம், மாவட்டம் வளர்ச்சியைப் பெறுகிறது. இதன் மூலமாக மாநிலத்தின் வளர்ச்சிக் குறியீடானது வளர்கிறது. இந்த வகையில், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் அனைத்தையும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு மிக, மிக அவசியமானவை என நாம் நினைக்கிறோம். உங்களது தேவைகளைச் சொல்லுங்கள். நிறைவேற்றித் தருகிறோம். தமிழ்நாட்டுக்கு நிலையான வளத்தை நீங்கள் உருவாக்கித் தாருங்கள்" என்று முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

உலகம்

8 mins ago

சினிமா

59 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்