வேலூர்/ராணிப்பேட்டை: வேலூரில் காவல் துறையினர் பாதுகாப்புடன் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய சாலைகள் வழியாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டது. முக்கிய இடங்களில் அதி நவீன ட்ரோன் கேமரா மூலம் ஊர்வலத்தை காவல் துறையினர் நேரடியாக கண்காணித்தனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண் டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பொது இடங்களில் வழிபாட்டுக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவல் துறையினர் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கும் பணி நேற்று நடைபெற்றது. வேலூர் மாவட்டத்தில் வேலூரில் விநாயகர் விஜர்சன ஊர்வலத்தையொட்டி வேலூர் சரக டிஐஜி (பொறுப்பு) சத்ய பிரியா மேற்பார்வையில் காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் 1,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலம் கோட்டத் தலைவர் மகேஷ் முன்னிலையில் நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்ட ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோயில், சந்தா சாகிப் மசூதி, கிரு பானந்தவாரியார் சாலை, தெற்கு காவல் நிலையம், கோட்டை சுற்றுச்சாலை, மாங்காய்மண்டி, பைபாஸ் சாலை வழியாக சதுப்பேரி ஏரியை அடைந்தது. அதேபோல், மற்றொரு ஊர்வலம் கொணவட்டத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் நேற்று பிற்பகல் தொடங்கி மாலை 5 மணியளவில் சதுப்பேரி ஏரியை அடைந்தது.
சதுப்பேரி ஏரியில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக பிரத்யேகமான இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு கிரேன் உதவியுடன் விநாயகர் சிலைகளை ஒன்றன் பின் ஒன்றாக கரைத்தனர்.
வேலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட சிலைகள் நேற்று ஒரே நாளில் கரைக்கப்பட்டன. பேர ணாம்பட்டிலும் ஒரு சில இடங் களில் வைக்கப்பட்ட சிலைகள் நேற்று பலத்த பாதுகாப்புடன் பத்தலப்பல்லி அணையில் கரைக் கப்பட்டன.
அதி நவீன ட்ரோன்
வேலூரில் விநாயகர் சதுர்த்தி விழா முழுவதையும் காவல் துறையினர் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். 4 சிறிய வகை ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணித்த நிலையில் TEREGRINE என்ற அதி நவீன ட்ரோன் கேமராவை பயன் படுத்தினர். இந்த வகை ட்ரோன் சுமார் 3 கிலோ எடையுள்ள பொருட் களையும் தூக்கிச் செல்லும் வசதி கொண்டது.
இதில், பொருத்தப்பட்ட அதி நவீன கேமரா மூலம் 200 மீட்டர் உயரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவு வரை கண்காணிக்க முடியும். 20 மீட்டர் உயரத்தில் இருந்தபடி கீழே செல்லும் வாகனத்தின் பதிவெண்ணை படம் பிடிக்கக்கூடிய திறன் கொண்டது.
கேமரா காட்சி பதிவை காவல் துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணித்து தேவைப்படும் இடத்தில் அறிவிப்பு வெளியிடுவதற்கான மைக்கையும் ட்ரோனில் பொருத்தியிருந்தனர். சுமார் 3 மணி நேரத்துக்கு பறக்கக் கூடிய இந்த அதி நவீன ட்ரோனை முக்கிய இடங்களில் காவல் துறையினர் நேற்று பயன் படுத்தினர்.
தனியார் நிறுவனத்தின் உதவி யுடன் காவல் துறையினர் முதன் முதலாக இந்த வகை ட்ரோனை பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வேலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் முடிந்த நிலையில் குடியாத்தம், பேரணாம்பட்டில் இன்றும், நாளையும் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடை பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாவில் நேற்று விநாயகர் விஜர்சன ஊர்வலம் நேற்று நடை பெற்றது. சுமார் 250-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புடன் அறிஞர் அண்ணா அரசினர் கல்லூரியில் தொடங்கிய ஊர்வலம் வி.சி.மோட்டூர் ஏரியில் நிறைவடைந்தது. அங்கு, விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. ஆற்காடு மற்றும் அரக்கோணத்தில் இன்றும், நாளையும் விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடைபெறவுள்ளது.