சென்னை: அதிமுக இணைப்பை வலியுறுத்தி மாவட்டம்தோறும் விரைவில் புரட்சிப் பயணம் தொடங்கப்படும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
சென்னை, பசுமைவழிச்சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-சை உசிலம்பட்டி தொகுதி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறியதாவது:
ஒன்றுபட்ட அதிமுகவாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் நிலைப்பாடாக உள்ளது. ஜூன் 23 மற்றும் ஜூலை 11-ம் தேதிகளில் அவர்கள் (பழனிசாமி) நடத்திய நாடகத்தை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதனால்தான் தொண்டர்கள் அனைவரும் எங்களை நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.
எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மாபெரும் தலைவர்கள், ஏழை, எளிய மக்களின் நலன் காக்க மட்டுமே அதிமுகவை உருவாக்கி கட்டிக்காத்தனர். அந்த இலக்கை நோக்கிதான் நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் பாதை மாறி செல்கிறார்கள். அப்படிசென்றால் விரும்பிய ஊருக்குச் சென்றுசேர முடியாது.
எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு, ஜானகி, ஜெயலலிதா ஆகிய இரு அணிகளாகப் பிரிந்து தேர்தலை சந்தித்ததால் வெற்றி வாய்ப்பை இழந்தோம். தேர்தல் முடிவு வந்தவுடனே, அதை உணர்ந்துகொண்டு, தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்தார்கள். அதன்மூலம் விசுவாசம் மிக்க தொண்டர்கள் என நிரூபித்துக் காட்டினர்.
அதேபோன்று இன்றும், உண்மை நிலையை அறிந்ததற்குப் பிறகு தொண்டர்கள் அனைவரும் இணைய வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றுக் கொண்டிருக்கிறது. கட்சி இணைப்பை வலியுறுத்தி மாவட்டம்தோறும் விரைவில் புரட்சி பயணத்தை தொடங்க இருக்கிறோம். எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு பயணித்தவர்கள், அதிமுகவுக்காக உறுதியாக இருந்தவர்களிடம் நானே நேரடியாகச் சென்று ஆதரவு கேட்பேன்.
கடந்த 5 ஆண்டுகளாக கூட்டு தலைமையாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருந்தோம். அரசுக்கும், இயக்கத்துக்கும் 100 சதவீதம் முழுமையாக ஒத்துழைப்பு தந்திருக்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.