தமிழகம்

போலி வாகன எண்களை பயன்படுத்தி தப்பிக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் சிறப்பு வாகன தணிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: வாகன எண் பலகையில் போலி எண்களை பயன்படுத்தி தப்பிக்கும் கொள்ளையர்களை பிடிக்க போலீஸார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

சென்னை பெருநகரில் பொதுமக்கள் பாதுகாப்புக்காகவும், நலனுக்காகவும் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

குற்றச் செயல்கள் நடைபெறும்போது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகளின் அடிப்படையிலும், தப்பிச் செல்லும் வாகனப் பதிவு எண் அடிப்படையிலும் துப்பு துலக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இதனால், சுதாரித்துக் கொண்ட சில திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளையர்கள் போலீஸாரிடமிருந்து தப்பிக்கும் வகையில் அவர்களின் வாகன எண் பலகையில் போலியான எண்களை பதிவிட்டு அதன் மூலம் போலீஸாரை குழப்பி, தப்ப முயலும் சம்பவங்களும் நிகழ்ந்து வருகின்றன.

இதனால், உஷாரான போலீஸார் இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்கும் வகையில் நேற்று முன்தினம் சென்னை மாநகர் முழுவதும் சிறப்பு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி, சென்னையில் முக்கிய சந்திப்புகளில் உள்ள வாகனத் தணிக்கை பகுதிகளில் 2,545 வாகனங்கள், சந்தை பகுதிகளில் 1,089 வாகனங்கள், குடிசை மற்றும் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் 999 வாகனங்கள் என மொத்தம் 4,633 வாகனங்களின் விவரங்கள் வாஹன் செயலி மூலம் பெற்று வாகன ஆவணங்களுடன் ஒப்பிட்டுசரிபார்த்து சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில் குறைபாடுள்ள நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்பட்டிருந்த சில வாகன ஓட்டிகளிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை பெருநகர காவல் துறையினரின் இந்த சோதனைகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், போலியான எண் பலகைகள் பொருத்திய வாகன ஓட்டிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.

வாகன எண் பலகைகளின் விவரங்களை விரைந்து பெறுவதற்காக, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பரிவாஹன் வலைதளத்தின் வாஹன் செயலியின் (Vahan App) மூலம், வாகன எண் பலகையில் உள்ள பதிவு எண்களின் விவரங்கள் பெறப்பட்டு ஒப்பிட்டுவிரைந்து சரிபார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திருட்டு, செயின் பறிப்பு, வழிப்பறி கொள்ளையர்கள் போலீஸாரிடமிருந்து தப்பிக்கும் வகையில் அவர்களின் வாகன எண் பலகையில் போலியான எண்களை பதிவிட்டு போலீஸாரை குழப்பி, தப்ப முயற்சிக்கின்றனர்.

SCROLL FOR NEXT