திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இடுவாய், மாணிக்காபுரம், பல்லடம், கேத்தனூர், குள்ளம்பாளையம், பொல்லிக்காளிபாளையம், பொங்கலூர், உடுமலை, தாராபுரம் பகுதிகளில் பெரும்பாலானவிவசாயிகள் தக்காளி சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக தக்காளி கிலோ ரூ.10-க்கு கடைகளில் விற்கப்படுகிறது. விவசாயிகளிடம் நேரடியாக கொள்முதல் செய்யும் வியாபாரிகள், கிலோ ரூ. 5-க்கும் குறைவாகவே அவர்களிடம் கொள்முதல் செய்கின்றனர். விலை கட்டுப்படியாகாத சூழலில், தரகு மண்டிக்கு தக்காளி விவசாயிகள் சென்றால், அங்கும் அவர்களுக்கு லாபகரமான சூழல் இல்லை.
இதனால், போதிய விலைக்கு விற்பனையாகாத தக்காளியை திருப்பூர் மாநகரில் உள்ள சந்தைகளிலும், குப்பைத் தொட்டிகளிலும் கொட்டிச்செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திருப்பூரை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, “15 கிலோ கொண்ட ஒரு பெட்டிதக்காளி ரூ. 60-க்கு விற்பனையாகிறது. ஆனால், கிலோவுக்கு ரூ. 2 கூட லாபம் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். சந்தையில் போதிய விலைக்கு தக்காளி விற்காததால், அங்கேயே தக்காளியை கொட்டிச்செல்லும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
தக்காளி பயிரிட்ட விவசாயி களின் கடன் சுமையை குறைக்கும் வகையில், தக்காளிக்கு குறைந்த பட்ச ஆதார விலையை அரசு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் கூறும்போது, ‘‘திருப்பூர் மாவட்டத்தில் நெல், கரும்பு, வெங்காயம், தக்காளி, சோளம்தான் பிரதான பயிர். சிறிய வெங்காயத்தை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள், மாற்றுப் பயிராக தக்காளியை பயிரிட்டனர். தற்போது தக்காளிக்கும் உரிய விலை கிடைக்காததால், பெரும் கடன் சுமைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்,” என்றார்.