மொழிப்பாடத்தாள்களின் எண்ணிக்கை  குறைப்பு மாணவர்களின் மொழி அறிவை பாதிக்கும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: "தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும், 6 பருவங்களில் 4 பருவங்களாவது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ஆளுகைக்குள் மாற்றப்பட்ட 14 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடத் தாள்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து இரண்டாக குறைக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களின் மொழி அறிவையும், பண்பையும் வளர்ப்பதற்கான மொழிப்பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாததாகும்.

விழுப்புரத்தில் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் மூடப்பட்டதைத் தொடர்ந்து அதனுடன் இணைக்கப்பட்டிருந்த விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 54 கல்லூரிகளும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றிருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 14 கல்லூரிகளும் அண்ணாமலை பல்கலை.யில் இணைக்கப்பட்டுள்ளன.

அண்ணாமலை பல்கலைக்கழகம் இதுவரை ஒருமை பல்கலைக்கழகமாக செயல்பட்டு வந்ததால், அதற்கு இணைவு கல்லூரிகளுக்கான பாடத் திட்டத்தை தயாரித்த அனுபவம் இல்லை.

விழுப்புரம் ஜெயலலிதா பல்கலைக் கழகம் செயல்படத் தொடங்குவதற்கு முன்பே மூடப்பட்டதால் அதற்காக தனியாக பாடத்திட்டம் எதுவும் தயாரிக்கப்படவில்லை. இத்தகைய சூழலில் அண்ணாமலை பல்கலை.யுடன் இணைக்கப்பட்ட 68 கல்லூரிகளில் 54 கல்லூரிகள் இதற்கு முன் வேலூர் திருவள்ளூவர் பல்கலைக்கழகத்துடன் இணைவு பெற்றிருந்தவை என்பதால் அந்த பல்கலைக்கழக பாடத்திட்டத்தை பின்பற்ற முடிவு செய்ததே குழப்பங்களுக்கு காரணம் ஆகும்.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளுக்கான மொழிப்பாடங்கள் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒன்றாகவே உள்ளன. ஆனால், இளம் வணிகவியல் (பி.காம்), இளம் வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடு( பி.காம்., சி.ஏ), இளம் வணிக மேலாண்மை (பி.பி.ஏ), இளம் கணினி பயன்பாடு (பி.சி.ஏ) ஆகிய நான்கு படிப்புகளுக்கு மட்டும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டில் இரு பருவங்களில் இரு தாள்கள், இரண்டாம் ஆண்டில் இரு பருவங்களில் இரு தாள்கள் என மொத்தம் 4 பருவங்களுக்கு 4 தமிழ் பாடத்தாள்கள், 4 ஆங்கிலப் பாடத்தாள்கள் கற்பிக்கப்படுகின்றன.

ஆனால், வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட மற்ற பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டில் மட்டுமே தலா இரு மொழிப் பாடத்தாள்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. இரண்டாம் ஆண்டில் மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுவதில்லை.

பாரதிதாசன் பல்கலைக்கழக பாடத்திட்டத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் பின்பற்றியிருந்தால் இந்த குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது; மாறாக, மற்ற 54 கல்லூரிகளும் தமிழ், ஆங்கில மொழிப்பாடங்களை கூடுதலாக இரு பருவங்களுக்கு படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

ஆனால், பாரதிதாசன் பல்கலை. பாடத்திட்டத்தை புறக்கணித்து விட்டு, திருவள்ளுவர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தை கடைபிடிப்பதால் 14 கல்லூரிகளின் மாணவர்கள் தமிழ், ஆங்கிலப் பாடங்களை போதிய அளவில் படிக்கும் வாய்ப்புகளை இழந்திருக்கிறார்கள்.

அத்துடன், பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால், தமிழ், ஆங்கில பேராசிரியர்களின் பணியிடங்கள் குறைக்கப்பட்டு அவர்கள் வேலையிழக்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க, பாரதிதாசன் பல்கலைக்கழகம் தவிர மற்ற பல்கலைக்கழகங்களில் பி.காம்., பி.காம்(சி.ஏ), பி.பி.ஏ., பி.சி.ஏ., படிப்புகளுக்கு தமிழ், ஆங்கிலப் பாடத்தாள்களின் எண்ணிக்கை குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு இரு ஆண்டுகளுக்கு மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படும் நிலையில், இந்த படிப்புகளுக்கு ஓராண்டு மட்டும் கற்பிப்பது எந்த வகையில் சரியாகும்? அறிவியல் பாடங்களை விட வணிகம், கணினி அறிவியல் சார்ந்த படிப்புகளில் முதன்மைப் பாடத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து, மொழிப்பாடங்களை புறக்கணிப்பது ஏன்?

பட்டப்படிப்புகளைப் பொறுத்தவரை முதன்மைப் பாடங்கள் அறிவியல், கலை, தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்க்கின்றன என்றால், மொழி அறிவை வளர்ப்பவை மொழிப்பாடங்கள் தான். பட்டப்படிப்பில் 4 மொழித்தாள்கள் இருக்கும் போதே பட்டம் பெற்றவர்களில் பெரும்பான்மையினரால் தமிழ், ஆங்கிலத்தை பிழையின்றி பேசவும், எழுதவும் முடிவதில்லை. அவ்வாறு இருக்கும் போது மொழிப்பாடத்தாள்களின் எண்ணிக்கையை பாதியாக குறைக்கும் போது மாணவர்களின் மொழி அறிவு மேலும் பாதிக்கப்படும்.

அதுமட்டுமின்றி, மொழிப்பாடங்கள் தான் மாணவர்களை பண்பட்டவர்களாக மாற்றுகின்றன. பல்வேறு இனங்களின் கலாச்சாரங்கள், பண்பாடுகள், மொழிவளமை, சமூகநீதி உள்ளிட்டவை குறித்து மாணவச் செல்வங்களுக்கு மொழிப்பாடங்கள் தான் விளக்குகின்றன. அறம், ஒழுக்க நெறி, பெரியோரை மதித்தல், நட்பு ஆகியவை குறித்து திருக்குறள் படித்து தான் அறிந்து கொள்ள முடியுமே தவிர, கணினி அறிவியலையும், வணிகவியலையும் படித்து தெரிந்து கொள்ள முடியாது.

மனிதர்களை மனிதத் தன்மையுடன் வைத்திருக்கவே மொழிப்பாடங்கள் கட்டாயமாகத் தேவைப்படுகின்றன. இதை உணர்ந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அனைத்து இளநிலை பட்டப்படிப்புகளிலும், 6 பருவங்களில் 4 பருவங்களாவது தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

23 hours ago

தமிழகம்

22 hours ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

தமிழகம்

1 day ago

மேலும்