ஊழலில் திமுக, அதிமுகவுக்கு இடையே வித்தியாசம் இல்லை: ஜி.ராமகிருஷ்ணன் கருத்து

ஊழலில் ஈடுபடுவதில் திமுக, அதிமுகவுக்கு இடையே வித்தியாசம் இல்லை என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடைபெற்ற மே தின பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர் களிடம் நேற்று கூறியதாவது:

தமிழ்நாட்டில் ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்கவும், மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தவும், தனிக்கட்சி ஆட்சிக்கு முடிவு கட்டி கூட்டணி ஆட்சியை உருவாக்கவும் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சி அமைவதுதான் தீர்வாக அமையும். எங்கள் ஆட்சியில் ஒரு நெறிமுறைக்குழு அமைக்கப்பட்டு, அமைச்சரவை, நிதி உள்ளிட்ட எல்லா முடிவுகளையும் அந்த குழு பரிசீலிக்கும்.

கிரானைட் முறைகேடு

தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கிரானைட் முறைகேடு நடைபெற்றுள்ளதில், மதுரையில் மட்டும் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என சகாயம் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த முறைகேட்டில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுக்கும் சமபங்கு உள்ளது.

2001 முதல் 2006 வரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கிரானைட் வெட்டியெடுக்க 77 குத்தகைகள் விடப்பட்டுள்ளன. 2006 முதல் 2011 வரை திமுக ஆட்சி காலத்தில் 68 குத்தகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவர்களில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கிரானைட் ஊழலை மறைத்து விடுவார்கள்.

கிரானைட் முறைகேடு, தாது மணல் கொள்ளை, மதுபான விற்பனை ஆகிய மக்கள் விரோத செயல்களில் இரண்டு கட்சிகளுக்கும் ஒரு எழுதப்படாத ஒப்பந்தம் உள்ளது. ஊழலில், பொருளாதாரக் கொள்கைகளில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா

ஆளும் கட்சி சார்பாக பல மாவட்டங்களில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அதை தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகளின் செயல்பாடுகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாக உள்ளது. அதனால்தான் இரண்டாம் கட்டமாக அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர்.

தாக்குதலுக்கு கண்டனம்

நேற்று முன்தினம் சிதம்பரம் பகுதியில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு திருவாரூருக்கு வைகோ வரும்போது, திமுகவை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அவரின் வாகனத்தை தாக்க முயற்சித்துள்ளனர். இதில், மதிமுகவை சேர்ந்த மகேஷ் என்பவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இருவரும் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடைபெறப்போவது குறித்து காவல்துறைக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தும், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்முறையில் ஈடுபடும் திமுகவினரை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE