கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கிருஷ்ணகிரி செங்குட்டுவன், வேப்பனப்பள்ளி முருகன், பர்கூர் கோவிந்தராசு, ஊத்தங்கரை மாலதி, தளி ஒய்.பிரகாஷ், காங்கிரஸ் வேட்பாளர் ஓசூர் கோபிநாத் ஆகியோரை ஆதரித்து, கிருஷ்ணகிரி கார்னேசன் திடலில் நேற்று முன்தினம் இரவு நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக பொருளாளர் ஸ்டாலின் பேசியதாவது:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என வாக்காளர்கள் நினைத்துவிட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெயலலிதா மக்களை சந்தித்தது உண்டா, எந்த மாவட்டத்திற்கும் செல்லவில்லை. அவர் சென்ற ஒரே மாவட்டம் நீலகிரி. அதுவும் ஓய்வு எடுப்பதற்காகத் தான்.
வரும் 19-ம் தேதி தேர்தல் முடிவிற்கு பிறகு, தமிழகத்தில் மது இல்லாத அளவிற்கு பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும். லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும். 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகள் ஒன்று கூட நிறைவேற்றப் படவில்லை. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லாமல் நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதன் மூலம் ஆட்சி கோமா நிலையில் உள்ளது.
தமிழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள், அதிமுக ஆதரவு நிலையிலிருந்து தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் 19-ம் தேதிக்கு பிறகு அவர்களை மன்னிக்க மாட்டோம். இது பழிவாங்கும் நோக்கமல்ல. மக்கள் நலன்கருதி ஜனநாயகத்தை காப்பாற்ற எடுக்கப்படும் முடிவாகும். அம்மா உணவகம், அண்ணா உணவகமாக மாற்றப்படும். அரசு நிர்வாகம் செயல் இழந்து உள்ளது. ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் 50% மக்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரே மாதத்தில் 100 சதவீதம் 2 மாவட்ட மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். 234 தொகுதிகளின் வளர்ச்சிக்கு சேர்த்து 501 தேர்தல் வாக்குறுதிகள் தரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நிறைவேற்றப்படும். 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் பேசினார்.