டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்க வாய்ப்பு

By வி.சுந்தர்ராஜ்

தஞ்சாவூர்: காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் டெல்டா பாசனத்துக்காக வழக்கமாக தண்ணீர் திறக்கப்படும் ஜூன் 12-ஆம் தேதிக்கு முன் கூட்டியே தண்ணீரை திறக்க பொதுப் பணித் துறை அதிகாரிகள் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படும். இதையடுத்து விவசாயிகள் குறுவை, சம்பா ஆகிய பருவங்களில் சாகுபடி மேற்கொள்வார்கள். இதைத் தொடர்ந்து ஜனவரி 28-ஆம் தேதி மேட்டூர் அணை மூடப்படும். மேட்டூர் அணையில் 90 அடிக்கு மேல் இருந்தால் டெல்டா மாவட்டங்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது என்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடிக்கு குறையாமல் இருந்து வந்தது. தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து கடந்த இரு தினங்களாக அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், இன்று (20-ம் தேதி) காலை வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 112 அடியாக உள்ளது. அணையின் நீர் கொள்ளளவு 120 அடியாகும். அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

அணைக்கு நீரின் வரத்து இதே அளவு தொடர்ந்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பிவிடும். எனவே மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரை டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதிக்கு பதிலாக முன்கூட்டியே திறக்கலாமா என பொதுப் பணித் துறையினர் கலந்து ஆலோசித்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறையின் மூத்த பொறியாளர் ஒருவர் கூறுகையில், "மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. தொடர்ந்து வரத்து அதிகரிக்குமானால், அணையின் முழு கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டி விடும். எனவே ஜூன் 12ஆம் தேதி வரை நாம் காத்திருக்க முடியாது. அதற்கு முன்பாகவே நாம் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடலாம்.

கடந்த காலங்களில் இதுபோன்று அணை நிரம்பிய போது முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. எனவே, டெல்டா மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணி மற்றும் காவிரி, கல்லணை கால்வாய் சீரமைப்பு பணி உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை பொதுப்பணித்துறையினர் அதிகாரிகள் இரவு பகலாக தற்போது கண்காணித்து வருகின்றனர்" என்றார்.

இதுகுறித்து மூத்த வேளாண் வல்லுநர் குழுவை சேர்ந்த ஒருவர் கூறுகையில், “மேட்டூர் அணையை வழக்கமாக ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடியை நீர் பற்றாக்குறை இன்றி மேற்கொள்ள முடியும். ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என நாங்கள் ஏற்கெனவே அரசுக்கு எங்களது பரிந்துரைகளை வழங்கியுள்ளோம்.

தற்போது டெல்டா மாவட்டங்களிலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது இதை பயன்படுத்தி, டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை தொடங்கியுள்ளனர். தற்போது மேட்டூர் அணை நிரம்பி விரைவில் தண்ணீர் திறந்தால் பாசனத்தை குறுவை சாகுபடியை விரைந்து முடிக்க ஏதுவாக இருக்கும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE