சேப்பாக்கம் தொகுதிக்குள் சென்றாலே இலவச இன்டர்நெட்! - 20 இடங்களில் வைஃபை சேவை; சென்னை மாநகராட்சி அனுமதி 

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்குள் சென்றாலே இலவச இணைய வசதி கிடைக்கும் வகையில் 22 இடங்களில் வைஃபை கம்பங்கள் அமைக்க சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

சென்னை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 49 இடங்களில் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் கம்பங்கள் மூலம் பொதுமக்களுக்கு 30 நிமிடம் இலவச வைஃபை வழங்கப்படுகிறது. 15வது மண்டலம் தவிர்த்து அனைத்து மண்டலங்களிலும் இந்த வசதி நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு உட்பட்ட 62,63,114,115,116,119,120 ஆகிய வார்டுகள் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பாட்டிற்கு இலவச வைஃபை அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அந்தக் கடிதத்தில் மொத்தம் 22 இடங்களில் 84 பைஃவை கம்பங்கள் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டு இருந்தார்.
இதன்படி அயோத்தியா நகர், பார்த்தசாரதி கோயில், பெரிய தெரு மசூதி, ஐஸ்அவுஸ் ஜங்ஷன், வெங்கடேஸ்வரா விடுதி, மீசால்பேட்டை மார்க்கெட், ஆதி சேசவ பொருமாள் கோயில், குடிநீர் வாரிய அலுவலக சாலை, பெல்ஸ் சாலை, ரத்னா கபே, கஸ்தூரி பாய் காந்தி மருத்துவமனை, நடுக்குப்பம் கோவில், லாயிட்ஸ் காலனி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, மணிக்கூண்டு உள்ளிட்ட இங்களில் அமைக்க கோரிக்கை வைத்து இருந்தார்.

இந்க் கோரிக்கையை ஏற்றதோடு நிபந்தனைகளுடன் இவ்விடங்களில் பைஃவை கம்பங்கள் அமைக்க தனியார் நிறுவனத்திற்கு சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE