கோவை: கோவையின் வளர்ச்சியில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார் என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தார்.
கொடிசியா சார்பில் கட்டுமானத் துறை சார்ந்த ‘பில்டு இன்டெக்’ மற்றும் தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த ‘வாட்டர் இன்டெக்’ கண்காட்சி கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் நேற்று தொடங்கியது. மாலையில் நடைபெற்ற மலர் வெளியீட்டு நிகழ்வில் கொடிசியா தலைவர் எம்.வி.ரமேஷ்பாபு வரவேற்றார். விழாவில், அமைச்சர் செந்தில்பாலாஜி பேசும்போது, “கரோனா தாக்கத்துக்கு மத்தியில் சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு கோவை கொடிசியாவில் ஒரு பயனுள்ள நிகழ்வாக இந்த கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயனுள்ள வகையில் கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோவையின் வளர்ச்சியில் தமிழக முதல்வர் தனி கவனம் செலுத்தி வருகிறார். கோவையின் தேவைகள் குறித்து மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் என்னிடமும், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மக்கள் பிரதிநிதிகளிடமும் கேட்டு நிறைவேற்றி வருகிறார். கரூர் மற்றும் கோவை மாவட்டங்கள் எனக்கு இரு கண்களைப் போன்றவை. இவ்விரு மாவட்டங்களின் வளர்ச்சிக்கு நிச்சயமாக பணியாற்றுவேன்” என்றார்.
மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, துணை மேயர் இரா.வெற்றி செல்வன், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நா.கார்த்திக், கண்காட்சி தலைவர் ஜி.ராம்மோகன், கொடிசியா செயலாளர் கார்த்திகேயன், சால்ஜர் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் துரைசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர். தொழில் துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி பார்வையிட்டார். பல்வேறு முன்னணி நிறுவனங்கள் சார்பில் கட்டுமானம், அதன் தொழில்நுட்பம், தண்ணீர் தொழில்நுட்பம் சார்ந்த தயாரிப்புகள், பொருட்கள் 460 அரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வரும் 11-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சி மூலமாக ரூ.100 கோடிக்கும் அதிகமான வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக கண்காட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.