மதுவில் மூழ்கும் எதிர்கால தலைமுறையை அரசு காப்பாற்ற வேண்டும்: ராமதாஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்றும் எண்ணம் இருந்தால் உடனடியாக அரசு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "பொது வெளியில், அரசு பேருந்தில், பயணிகளுக்கு மத்தியில் மாணவர்களும், மாணவிகளும் இணைந்து, எந்தவித அச்சமும், நாணமும் இன்றி மது அருந்துவது சாதாரணமான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் வெட்கி தலைகுனிய வேண்டிய செயலாகும். அதேநேரத்தில் இதற்கு மாணவர்களை மட்டுமே குறை கூறி விட முடியாது. இத்தகைய தவறுகளை செய்வதற்கான சூழலை ஏற்படுத்திய திரைப்பட காட்சிகளும், தெரு தோறும் மதுக்கடைகளை திறந்து வைத்த அரசும் தான் முதன்மைக் காரணமாகும்.

பொது வெளியில் மது அருந்துவதும், காலியான மதுப்புட்டிகளை சாலைகளில் வீசி உடைப்பதையும் தான் சாகசங்கள் என்று திரைப்படங்கள் கற்பிக்கின்றன. இத்தகைய காட்சிகள் இளைய தலைமுறை மத்தியில் எத்தகைய சீரழிவை ஏற்படுத்தும் என்பது குறித்த அக்கறை திரைத்துறையினருக்கு இல்லை. கதைக்கு இத்தகைய காட்சிகள் அவசியம் என்று சிலர் அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். அக்காட்சியின் போது ‘மது குடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது’ எச்சரிக்கை வாசகத்தை காட்டி விட்டால், அதுவே பாவத்திற்கான பரிகாரமாகி விடும் என அவர்கள் நினைக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். சீரழிவுக்கு துணை போகும் சில திரைத்துறையினரும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

அவர்களையும் கடந்த பொறுப்பு அரசுக்குத் தான் வர வேண்டும். 2003ம் ஆண்டில் மதுக்கடைகள் அரசுடைமையாக்கப்ப்பட்ட பின்னர் தெருக்கள் தோறும் மதுக்கடைகள் திறக்கப்பட்டதை விட பெரும் துரோகம் எதுவும் இருக்க முடியாது. வீட்டிலிருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நூலங்களும், ஆலயங்களும் இருக்கின்றனவோ, இல்லையோ.... மதுக்கடைகள் இருக்கின்றன. மதுக்கடைகளை கடந்து தான் கிட்டத்தட்ட அனைத்து மாணவ, மாணவியரும் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியிருக்கிறது.

முன்னொரு காலத்தில் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் தான் இருந்தன. அதனால் மது என்ற சாத்தான் குறித்து மாணவர், மாணவியருக்கு தெரியாமல் இருந்தது. ஆனால், இப்போது மது மிகவும் எளிதாகவும், தாராளமாகவும் கிடைப்பது தான் மாணவச் செல்வங்களின் சீரழிவுக்கு காரணம்.

தமிழகத்தில் மதுக்கடைகள் நண்பகல் 12 மணிக்குத் தான் திறக்கப்படுகின்றன. 21 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தான் மது விற்பனை செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதிமொழி அளித்திருக்கிறது. ஆனால், காலையில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போதே, 17 வயது கூட நிரம்பாத மாணவச் செல்வங்களின் கைகளில் மதுப்புட்டிகள் எங்கிருந்து கிடைத்தன? இந்த வினாவுக்கு விடையளிக்காமல் அரசும், டாஸ்மாக் நிறுவனமும் எளிதாக கடந்து சென்று விட முடியாது.

இன்னும் என்னென்ன சீரழிவுகளையெல்லாம் பார்க்க வேண்டும் என அரசு ஆசைப்படுகிறது எனத் தெரியவில்லை. மதுவை விற்று அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தான் அரசை நடத்த வேண்டும் என்ற நிலை இருக்கும் வரை தமிழகத்தில் இத்தகைய சீரழிவுகளை தவிர்க்க முடியாது. மதுவில் மூழ்கும் தமிழகத்தையும், எதிர்காலத் தலைமுறையினரையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு இருந்தால் உடனடியாக தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

11 hours ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

37 mins ago

சுற்றுலா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்