முதல்வர் ஜெயலலிதா இன்று பிரச்சாரம் தொடக்கம்

By செய்திப்பிரிவு

தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெய லலிதா, தேர்தல் பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் இன்று தொடங்குகிறார்.

மாலை 6 மணிக்கு தீவுத்திடலில் நடக்கும் பிரம்மாண்ட பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் 20 வேட்பாளர்களையும் அறிமுகப் படுத்தி வாக்கு சேகரிக்கிறார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் மே 16-ம் தேதி நடக்கிறது. அதிமுக 227 தொகுதிகளில் போட்டி யிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்காக 7 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா தனது பிரச்சாரப் பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று முதல் மே 12-ம் தேதி வரை 15 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்ய உள்ளார். சென்னை, விருத்தாசலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம், திருச்சி, புதுச்சேரி, மதுரை, கோவை, விழுப்புரம், பெருந்துறை, தஞ்சை, நெல்லை, வேலூர் என மொத்தம் 15 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார். அந்த இடங்களில் ஏற்பாடு செய்யப்படும் பிரச்சார பொதுக்கூட்ட மேடையில், அந்த மாவட்டம் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களுக்காக வாக்கு சேகரிக்கிறார். வெளி மாவட்ட பிரச்சாரங்களுக்கு அவர் ஹெலிகாப்டரில் செல்வார் என அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

தீவுத்திடலில் இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கேற் கிறார். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் தனக்காக அவர் வாக்கு சேகரிக்கிறார். பெரம்பூர் - பி.வெற்றிவேல் , கொளத்தூர் - ஜேசிடி பிரபாகர், வில்லிவாக்கம் - தாடி ம.ராசு, திருவிக நகர் - வ.நீலகண்டன், எழும்பூர் - பரிதி இளம்வழுதி, ராயபுரம் - டி.ஜெயக்குமார், துறைமுகம் - கே.எஸ்.சீனிவாசன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி - ஏ.நூர்ஜகான், ஆயிரம் விளக்கு - பா.வளர்மதி, அண்ணாநகர் - எஸ்.கோகுல இந்திரா, விருகம்பாக்கம் - விருகை வி.என்.ரவி, சைதாப்பேட்டை - சி.பொன்னையன், தி.நகர் - தி.நகர் சத்தியா, மயிலாப்பூர் - ஆர்.நடராஜ், வேளச்சேரி - நீலாங்கரை எம்.சி.முனுசாமி, சோழிங்கநல்லூர் - லியோ என்.சுந்தரம், ஆலந்தூர் - பண்ருட்டி ச.ராமச்சந்திரன், மாதவரம் - டி.தட்சிணாமூர்த்தி, திருவொற்றியூர் - பி.பால்ராஜ் என 20 தொகுதிகளின் வேட்பாளர் களையும் அறிமுகப்படுத்தி, ஆதரித்து பேசுகிறார். இன்று மாலை நடக்கும் முதல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்திலேயே அதிமுக வின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

தீவுத்திடல் பொதுக்கூட்டத்தில் 35 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன என்று விழா அமைப்பாளர்கள் தெரிவித் தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE