கட்சி தலைமையின் உத்தரவை கண்டுகொள்ளாததால் சுரண்டை நகராட்சி துணைத் தலைவர் வாய்ப்பை திமுக இழந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த சுரண்டை தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு, முதல் உள்ளாட்சி தேர்தலை சந்தித்தது. வார்டுகள் ஒதுக்கீட்டில் சுமுக உடன்பாடு ஏற்படாததால், அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டன. மொத்தம் உள்ள 27 வார்டுகளில் காங்கிரஸ் 10, திமுக 9, அதிமுக 6, தேமுதிக, சுயேச்சை தலா ஒரு வார்டில் வெற்றிபெற்றன.
எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் தலைவர் பதவியை கைப்பற்ற திமுக, காங்கிரஸ் தீவிரமாக முயன்றன. இந்நிலையில், சுரண்டை நகராட்சித் தலைவர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கி திமுக அறிவித்தது. நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், 11-வது வார்டு காங்கிரஸ் உறுப்பினர் வள்ளிமுருகன் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் போட்டியிடவில்லை. கூட்டத்துக்கு 15 உறுப்பினர்கள் மட்டுமே வந்திருந்தனர். கூட்டம் நடத்த பெரும்பான்மை உறுப்பினர்கள் வருகை இருந்தது. வள்ளிமுருகன் நகராட்சி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதேபோல், துணைத் தலைவர் பதவிக்கு 13-வது வார்டு அதிமுக உறுப்பினர் சங்கராதேவி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக உறுப்பினர்கள் 9 பேரும் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. இதனால், அதிமுக ஆதரவுடன் தலைவர் பதவியை கைப்பற்றிய காங்கிரஸ், துணைத் தலைவர் பதவியை அதிமுகவுக்கு ஒதுக்கி, போட்டியின்றி தேர்வாகச் செய்தது.
கட்சித் தலைமை உத்தரவை ஏற்று காங்கிரஸ் கட்சியுடன் சுமுக உடன்படிக்கையை ஏற்படுத்தியிருந்தால் சுரண்டை நகராட்சி துணைத் தலைவர் பதவியை கைப்பற்றி இருக்கலாம். ஆனால், 6 உறுப்பினர்களை மட்டுமே பெற்றுள்ள அதிமுக துணைத் தலைவர் பதவியை கைப்பற்றிவிட்டது என்று, திமுகவினர் வேதனையுடன் கூறுகின்றனர்.
கீழப்பாவூர் பேரூராட்சி
சுரண்டையில் திமுக, காங்கிரஸ் இடையே உரசல் நீடிக்கும் நிலையில், கீழப்பாவூர் பேரூராட்சியில் திமுக, காங்கிரஸ் இணைந்து செயல்பட்டுள்ளது. கீழப்பாவூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்காவிட்டாலும், தேர்தலுக்கு முன்பே உள்ளூர் திமுகவினர் துணைத் தலைவர் பதவியை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக உறுதியளித்தனர். அதன்படி, கீழப்பாவூர் பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி, போட்டியின்றி வெற்றி பெறச் செய்துள்ளனர்.