அணைகள் பாதுகாப்புச் சட்டத்தால் தமிழகத்துக்கு பாதகங்கள் என்னென்ன? - வேல்முருகன் பட்டியல்

By செய்திப்பிரிவு

சென்னை: "மத்திய அரசு கொண்டுவந்துள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி தமிழர்கள் ஒன்று திரள வேண்டும்" என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அணைப் பாதுகாப்பு மசோதா டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் கடந்த 18.02.2022 அன்று முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள பெரிய, குறு, தடுப்பணைகள் என 5,264 அணைகளை, ஒன்றிய அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் வகையில், அணைகள் பாதுகாப்பு சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேசிய அணைப் பாதுகாப்பு ஆணையம் என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கி, அதன் வாயிலாக, அணைகளின் கண்காணிப்பு, ஆய்வு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அணைகள் மீதான உரிமைகளை மாநில அரசு இழந்து விடும். மேட்டூர் அணை, வைகை, கீழ்பவானி உள்ளிட்ட அணைகளும், சாத்தூர் அணை, தாமிரபரணி உள்ளிட்ட தடுப்பணைகளும் ஒன்றிய அரசின் கீழ் சென்று விடும். அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவது குறித்து மத்திய அரசே முடிவு செய்யும். இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை திருத்தாமல், நாட்டை ஒற்றை ஆட்சியின் கீழ் நிறுவுவதே பாஜக, ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதித்திட்டம். அதற்கான சூழ்ச்சி தான், அணைகள் பாதுகாப்பு சட்டம். இச்சட்டம் முழுமையாக செயலுக்கு வரும் போது, முல்லைப் பெரியாறு அணையை உடைத்து விட்டு, புதிய அணையை கட்டியே தீருவோம் என்ற கேரளா அரசின் சதித்திட்டம் நிறைவேறுவதற்கான அபாயம் உள்ளது.

ஏனென்றால், மத்தியில் எந்த அரசாக இருந்தாலும், முல்லைப் பெரியாறு மற்றும் காவிரி அணை விவகாரத்தில், தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு எடுப்பதே கடந்த கால வரலாறு. தமிழர்களுக்கு எதிரான இன ஒதுக்கல் நடைமுறையை கையாளுவதே அவர்களின் மன ஓட்டம். கேரளாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோதும் சரி, தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இருக்கும் போதும் சரி, அவர்களின் கருத்தில் மாற்றம் இல்லை. அதாவது, முல்லைப் பெரியாறு அணையை உடைத்து, புதிய அணை கட்டுவது தான், அக்கட்சிகளின் ஒன்றை நோக்கம். அந்த நோக்கம் நிறைவேறுவதற்கு, இந்த அணைகள் பாதுகாப்பு சட்டம் வழிவகுக்கும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டாலும், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய உரிய நீரை இன்று வரை நம்மால் பெறக்கூட முடியவில்லை. அந்த ஆணையத்திற்கு வழங்கப்படும் தமிழகத்தின் நிதி வீணாகத் தான் செலவாகிக் கொண்டிருக்கிறது. அப்படி இருக்கையில், அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக, தமிழகத்திற்கு உரிய தண்ணீர் கிடைத்து விடும் என்பதெல்லாம் தமிழர்களை ஏமாற்றும் வேலை. அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக, மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கப்படுவதோடு, அணைகளை தனியார் வசம் விடப்படும். இதன் மூலம், அணைகளை தன் வசப்படுத்தும் தனியார் நிறுவனங்கள், ஆறுகளிலும், ஓடைகளிலும் தரையில் கான்கிரீட் தளங்களை அமைத்து, நீரை சேமிக்கும்.

இதனால், நிலத்தடி நீர் பாதிக்கப்படும். அதனை நம்பியுள்ள விளைநிலங்கள் பாலைவனமாகும். விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கும். பாசனத்திற்கும், குடிநீருக்கும் மீட்டர் பொருத்தி தண்ணீர் திறக்கும் தனியார் நிறுவனங்கள், விவசாயிகளிடமும், மக்களிடமும் கொள்ளை இலாபம் ஈட்டும். குறிப்பாக, தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இல்லாமல், நேரடியாக ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. நெடுஞ்சாலைகளை ஒன்றிய அரசு, தனியாரிடம் ஒப்படைத்ததன் வாயிலாக, சுங்கச்சாவடிகளில் கொள்ளை இலாபம் ஈட்டப்படுகிறது. மண்ணின் மக்களாகிய நாம், அவர்கள் நிர்ணயித்துள்ள கட்டணத்தை கொடுத்து விட்டு, புலம்பியபடியே செல்ல வேண்டிய அவலம் உள்ளது. நெடுஞ்சாலைக்கு வந்த அதே சிக்கலைத் தான், அணைகள் பாதுகாப்பு சட்டத்தின் வாயிலாக நாம் சந்திக்க வேண்டும்.

எனவே, மாநில அரசின் உரிமைகள் பறிக்கப்படும் வகையில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ள அணைகள் பாதுகாப்புச் சட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உள்ளது. அதனை உணர்ந்து தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. காவிரியும், முல்லைப்பெரியாறும் எங்கள் உரிமை, அணை பாதுகாப்பு சட்டத்தை திரும்பப் பெறு, தமிழின இன ஒதுக்கலை கைவிடு என்ற முழக்கத்துடன், கட்சி பேதமின்றி தமிழர்கள் ஒன்று திரள வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது" என்று வேல்முருகன் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

38 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

மேலும்