கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றுதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டம் வடுகபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயி மகள், ஒரு பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்துவந்துள்ளார். இவரை அப்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் மதம் மாறச் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இதனால் மனமுடைந்த மாணவி, பள்ளியில் இருந்த விஷதிரவத்தை அருந்தியுள்ளார். அரசுமருத்துவமனையில் சிகிச்சைபலன் அளிக்காமல் மாணவி உயிரிழந்துள்ளார்.

மரணத்துக்கு முன்பு மாணவி பேசிய வீடியோ பதிவு மனதை பதறவைக்கும். ஆனால், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கை, மரணத்துக்கு முன்பு மாணவி பேசிய வீடியோ பதிவுக்கு சம்பந்தமில்லாமல் இருக்கிறது.

எனவே, நடுநிலையான விசாரணை நடக்க அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம்செய்தவர்கள் கைது செய்யப்பட்டு கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். கட்டாய மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

‘இந்த மாத கோட்டா’

இதற்கிடையில், ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை நேற்று கூறியபோது, ‘‘அதிமுக முன்னாள் அமைச்சர் அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை என்பது, திமுகவின் இந்த மாதத்துக்கான கோட்டா என்றே சொல்ல வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE