உத்தரப்பிரதேச மாநிலத்தில் சென்ட்தயாரிக்கும் தொழிலதிபர் வீட்டில்வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டதன் தொடர்ச்சியாக, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் உள்ள அவரது சகோதரருக்குச் சொந்தமான வாசனை திரவியத் தொழிற்சாலையிலும் நேற்று திடீரென வருமான வரி சோதனை நடைபெற்றது.
மும்பையைச் சேர்ந்த பங்கஜ் ஜெயின் என்பவரின் ‘பிராகதி அரோமா’ என்ற தொழிற்சாலை திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ளது. இங்கு நிலக்கோட்டை பகுதியில் விளையும் மல்லிகைப் பூக்களை வாங்கி, அதில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சுமார் 140 பேர் பணிபுரிகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்றுகாலை 8 மணியளவில் 10 பேர்கொண்ட வருமானவரித் துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். வடமாநிலத்தில் இருந்து வந்த அதிகாரிகளுடன், மதுரை மண்டல அதிகாரிகளும் இணைந்து இச்சோதனையில் ஈடுபட்டனர்.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பங்கஜ் ஜெயினின் சகோதரர் புஷ்பராஜ் ஜெயின் என்பவரின் வீட்டில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த வருமான வரி சோதனையில் வீடு முழுவதும் கோடிக்கணக்கான ரூபாய் கட்டுக்கட்டாக கைப்பற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அவரது சகோதரர் பங்கஜ் ஜெயினின் நிலக்கோட்டை சென்ட் தொழிற்சாலையிலும் சோதனை நடந்துள்ளது. இச்சோதனை நேற்று மாலை வரை நீடித்தது.