கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சசிகலா உறவினரிடம் போலீஸார் விசாரணை

By செய்திப்பிரிவு

கோவை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் கோவையில் போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டுஏப்ரல் மாதம் 24-ம் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர்(50) கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக, நீலகிரி மாவட்ட போலீஸார் விசாரித்தனர்.

இவ்வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜிஜின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்கிற பிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய கார் ஓட்டுநர் கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில், சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன், கோடநாடு வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடித்தது. மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் இவ்வழக்கு தொடர்பான மறுவிசாரணையை நீலகிரி மாவட்ட போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக கூடுதல் எஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கில், திடீர் திருப்பமாக, உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரையும் நீலகிரி மாவட்ட போலீீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.

போலீஸ் சம்மன்

இந்நிலையில், கோடநாடு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, சசிகலாவின் உறவினரும், தனியார் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர்களில் ஒருவருமான விவேக் ஜெயராமனுக்கு போலீஸார் சம்மன் அனுப்பிஇருந்தனர்.

அதன்பேரில், நேற்று மதியம் கோவை போலீஸ் பயிற்சிக் கல்லூரிவளாகத்தில் உள்ள காவல்துறை அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு அவர் ஆஜரானார். அவரிடம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக அதிகாரிகள் விசாரித்தனர். கைதுசெய்யப்பட்ட நபர்களுடன் ஏதாவது அறிமுகம் உள்ளதா என்பனபோன்ற பல்வேறு கேள்விகள் குறித்து அவரிடம் கேட்டறிந்தனர். ஏறத்தாழ 3 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

உண்மையை அறிய விருப்பம்

விசாரணைக்குப் பின்னர், தனியார் தொலைக்காட்சிக்கு விவேக் ஜெயராமன் பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘‘கோடநாடு வழக்கு தொடர்பாக காவல்துறையினர் என்னிடம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறியுள்ளேன். கோடநாடு வழக்கில் உண்மையை அறிந்து கொள்ள நாங்களும் விரும்பு கிறோம். இந்த வழக்கு எங்களுக்கும் மிக முக்கியமானது’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE