தங்கமணியின் வீடு, 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை; கணக்கில் வராத ரூ.2.16 கோடி பறிமுதல்; கிரிப்டோ கரன்சியில் முதலீடு

By செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய 69 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.2.16 கோடி கைப்பற்றப்பட்டது.

கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரை தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருந்தவர் பி.தங்கமணி. தற்போது குமாரபாளையம் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்கிறார். அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.85 கோடிக்கு சொத்து சேர்த்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி (60), அவரது மனைவி டி.சாந்தி (56), மகன் டி.தரணிதரன் (32) ஆகியோர் மீது நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இதையடுத்து சென்னை, நாமக்கல், சேலம், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் உள்ள தங்கமணி மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். சென்னையில் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள தங்கமணியின் அறை, பனையூர் பண்ணை வீடு உட்பட 14 இடங்களில் சோதனை நடந்தது.

நாமக்கல் மாவட்டம் ஆலாம்பாளையம் அடுத்த கோவிந்தம்பாளைத்தில் உள்ள பி.தங்கமணியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது தங்கமணியும், அவரது மனைவியும் வீட்டில் இருந்தனர்.

தங்கமணியின் தனி உதவியாளர் சேகர், பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சித் தலைவர் வெள்ளியங்கிரி, தங்கமணியின் நண்பரும் விசைத்தறி உரிமையாளர் சங்க தலைவருமான டி.கே.எஸ்.சுப்பிரமணியம், தங்கமணியின் சம்பந்தி சிவசுப்பிரமணியம், அவரது தம்பி மூர்த்தி, தங்கமணியின் சகோதரி நாகரத்தினம், ‘நியூஸ் ஜெ’ தொலைக்காட்சி உரிமையாளரான தங்கமணியின் மருமகன் தினேஷ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடந்தது.

சேலத்தில் உள்ள தங்கமணியின் மகன் தரணிதரன் வீடு, அலுவலகம் மற்றும் அரசு ஒப்பந்ததாரர் குழந்தைவேலுவின் வீடு, ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள தங்கமணியின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

நாமக்கல்-33, சென்னை-14, ஈரோடு-8, சேலம்-4, கோவை-2, கரூர்-2, கிருஷ்ணகிரி-1, வேலூர்-1, திருப்பூர்-1, கர்நாடக மாநிலம் பெங்களூரு-2, ஆந்திர மாநிலம் சித்தூர்-1 என மொத்தம் 69 இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது

கிரிப்டோ கரன்சியில் முதலீடு

நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பதிவு செய்த வழக்கில் தங்கமணி, அவரது மகன் தரணிதரன் இருவரும் வருவாய்க்கு அதிகமாக சேர்த்த சொத்துகளை தமிழகம் மற்றும் வெளியிடங்களில் உள்ள தங்களது உறவினர்கள், ஆதரவாளர்கள் பெயரில் வைத்துள்ளனர். மேலும், முறைகேடான வழியில் ஈட்டிய பெரிய தொகையை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்துக்கு சொத்து சேர்த்ததாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் தங்கமணி, அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், நேற்று 69 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.2 கோடியே 37 லட்சத்து 34 ஆயிரத்து 458 ரொக்கம், 1.130 கிலோ தங்க நகைகள், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் கணக்கில் வராத பணம் ரூ.2 கோடியே 16 லட்சத்து 37 ஆயிரம் ஆகும். செல்போன், பல வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக சாவிகள், ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் வழக்குக்கு தொடர்புடைய ஆவணங்கள் சோதனையில் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு உட்பட சென்னையில் 14 இடங்களில் சோதனை

சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணியின் வீடு மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் தொடர்புடைய 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று சோதனை மேற்கொண்டனர்.

சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதியில் உள்ள தங்கமணியின் அறை, கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள பண்ணை வீடு, கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் சாலையில் உள்ளவி.சத்தியமூர்த்தி அன்கோ, பட்டினப்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் கே.சிவசுப்பிரமணியன் வீடு, அண்ணா நகரில் உள்ள சசிரேகா இல்லம், நுங்கம்பாக்கம் மோகன் குமாரமங்கலம் தெருவில் உள்ள பி.எஸ்.டி. என்ஜினீயரிங் கட்டுமான நிறுவனம், மதுரவாயல் திருகுமரன் நகரில்உள்ள தருண் கட்டுமான நிறுவனம், எழும்பூர் காஜாமைதீன் சாலையில் உள்ள ஆனந்த வடிவேல் வீடு, டிராவல்ஸ் நிறுவனரான விசாலாட்சி வீடு, அரும்பாக்கம் ராதாகிருஷ்ணன் நகரில்உள்ள கட்டுமான நிறுவனம்,அரும்பாக்கம் ஈ.வி.ஆர். பெரியார் சாலையில் உள்ள பிளைவுட்நிறுவனம், கோயம்பேட்டில் தென் ஆசியா விளையாட்டு கிராமத்தில் உள்ள ஜனார்த்தனன் வீடு, சென்னை வெங்கட் நாராயண ரோடு சுவாதி காம்ப்ளக்சில் உள்ளகனிமவள நிறுவனம், சென்னை ஷெனாய் நகரில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு ஆகிய 14 இடங்களில் சோதனை நடைபெற்றது.

எஃப்ஐஆர் விவரம்

தங்கமணியின் மகன் தரணிதரன் பெயரில் `முருகன் எர்த் மூவர்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டியிருந்த நிலையில், பெயரளவில் மட்டுமே அப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதாக பதிவுசெய்து, முறைகேடாக வரும் வருமானத்தை மறைத் துள்ளனர்.

மனைவி சாந்தி பெயரில் எவ்வித தொழிலும் நடைபெற வில்லை என முன்னாள் அமைச்சர் தங்கமணி தனது சொத்துவிவர அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் பெயரில் கோடிக்கணக்கில் சொத்து உள்ளது. குறிப்பாக, 2016-ல்வேட்புமனு தாக்கல் செய்யும்போது, முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் பெயரில் உள்ள சொத்து மதிப்புரூ.1 கோடியே 1 லட்சத்து 86 ஆயிரத்து 17 எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 2021-ம் ஆண்டு வேட்புமனு தாக்கலில் இணைத்து காட்டப்பட்ட சொத்துகளின் மதிப்பு ரூ.8 கோடியே 47 லட்சத்து 66 ஆயிரத்து 318.

2016 முதல் 2021-ம் ஆண்டு வரை முன்னாள் அமைச்சர் தங்கமணி மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் ஆகியோரின் வருமானம் ரூ.5 கோடியே 24 லட்சத்து 86 ஆயிரத்து 617. கடந்த 5 ஆண்டுகளில் ரூ.7 கோடியே 45 லட்சத்து 80 ஆயிரத்து 301 மதிப்புள்ள சொத்துகள் அதிகமாகியுள்ளன. இதில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.4 கோடியே 85 லட்சத்து 72 ஆயிரத்து 19 சொத்து சேர்ந்துள்ளது.

தங்கமணியின் மருமகன் தினேஷ்குமார் மான்ட்ரோ நெட்வொர்க் என்ற பெயரில் தனியார் சேனலின் இயக்குநராக இருக்கிறார். மேலும், மெட்ராஸ் ரோட் லைன், ஜெயஸ்ரீ செராமிக், பிளை அண்ட் வணீர், ஏ.ஜி.எஸ். டிரான்ஸ் மூவர், ஸ்மார்ட் ட்ரேட் லிங்ஸ், ஸ்மார்ட் டெக்மற்றும்  பிளைவுட், இன்ப்ராப்ளூ மெட்டல் ஆகிய நிறுவனங்களிலும் பங்குதாரராக இருந்து வருவது தெரியவந்துள்ளது.

தினேஷ் குமாரின் தந்தை சிவசுப்பிரமணியன் பெயரில் எம்.ஆர்.எல். லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக் கான லாரிகள் இயங்கி வருகின்றன. தங்கமணியின் மகள்லதா பெயரில் ஜெய பிளைவுட் மற்றும் ஜெய பில்ட் புரோஎன்ற நிறுவனங்கள் நாமக்கல் பள்ளிபாளையத்தில் செயல் பட்டு வருகின்றன. பினாமி பெயரில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதாகவும் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5-வது அமைச்சர்

முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை மேற்கொண்ட நிலை யில், முன்னாள் அமைச்சரான தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

43 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

4 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்