கனமழையால் வெள்ளக்காடாக மாறிய தூத்துக்குடி மாவட்டம்: திருச்செந்தூர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. திருச்செந்தூர் கோயிலுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு பாதியில் விடுமுறை விடப்பட்டதால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பெரும் திண்டாட்டம் அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மிக கனமழை கொட்டியது. நேற்று, இரவில் விட்டுவிட்டு லேசான மழை பெய்ததாலும், காலையில் 9 மணி வரை பெரிய அளவில் மழை இல்லை என்பதாலும் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படவில்லை.

திருச்செந்தூரில் 17 செ.மீ. மழை:

இந்நிலையில் காலை 9 மணிக்கு மேல் படிப்படியாக மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டத்தின் தெற்கு பகுதிகளான திருச்செந்தூர், காயல்பட்டினம், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் காலை 9 மணி முதல் கனமழை பெய்தது. குறிப்பாக திருச்செந்தூரில் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை பகல் 12 மணி வரை நீடித்தது. சுமார் 3 மணி நேரத்தில் மட்டும் திருச்செந்தூரில் 17 செ.மீ. மழை பதிவானது.

இதன் காரணமாக திருச்செந்தூர் நகர் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. சன்னதி தெரு, மார்க்கெட் பகுதி, போக்குவரத்துக் கழக பனிமனை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ளம் குளம் போல தேங்கியது. அனைத்து சாலைகளிலும் மழை நீர் ஆறுபோல பெருக்கெடுத்து ஓடியது.

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் கிரிப்பிரகாரம், சண்முக விலாசம் பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இந்த பகுதிகளில் இருந்து மழைநீர் திருக்கோயிலுக்கு உள்ளேயும் வழிந்தோடியதால் பக்தர்கள் அவதியடைந்தனர். மேலும், கோயில் கடற்கரை பகுதியில் மணல் பரப்பு தெரியாமல் தண்ணீர் தேங்கி நின்றது.

இதேபோல் காயல்பட்டினம் பகுதியிலும் கனமழை கொட்டித் தீர்த்ததால் நகர் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மேலும், குலசேகரன்பட்டினம், உடன்குடி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளிலும் கனமழை கொட்டியதால் பல இடங்களில் குடியிருப்பு பகுதிகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டன. சாலைகள், தெருக்களில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.

தூத்துக்குடி மாநகர பகுதியில் காலை முதல் லேசான மழை தான் பெய்து கொண்டிருந்தது. பகல் 12 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. மாலை 3 மணி வரை சுமார் 3 மணி நேரம் மிக கனமழை கொட்டித் தீர்த்தது. அதன் பிறகும் லேசான மழை இரவு வரை பெய்து கொண்டே இருந்தது. இந்த கனமழை காரணமாக தூத்துக்குடி மாநகரமே வெள்ளக்காடாக மாறியது.

வீடுகளுக்குள் மழைநீர்:

லேசான மழைக்கே தாக்குப்பிடிக்காத தூத்துக்குடி மாநகர பகுதியில் மிக கனமழை பெய்ததால் சாலைகள், தெருக்கள் அனைத்தும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தூத்துக்குடி தற்காலிக பேருந்து நிலையம், தருவை விளையாட்டு மைதானம் போன்றவை தண்ணீரில் மிதக்கின்றன. தூத்துக்குடி டூவிபுரம், தாளமுத்துநகர், சத்யாநகர், கால்டுவெல் காலனி, பூபாலராயர்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதியடைந்தனர்.

மேலும், மாநகர பகுதி முழுவதுமே குடியிருப்புகளை சூழந்து மழைநீர் தேங்கி நிற்பதால் மக்கள் வெளியே வர முடியாமல் வீடுகளுக்கு உள்ளே முடங்கி கிடந்தனர். சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் தூத்துக்குடி மாநகர பகுதியில் 3 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகரில் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.

விமான சேவை:

தூத்துக்குடி ரயில் நிலையத்தின் தண்டவாளங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கியது. அதுபோல கனமழை காரணமாக விமான சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. சென்னையில் இருந்து பகல் 1.50 மணிக்கு தூத்துக்குடிக்கு வந்த விமானம் தரையிறங்க முடியாததால் திருச்சிக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அந்த விமானத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு உள்ளிட்ட பயணிகள் இருந்தனர்.

இதேநேரத்தில் மாலை 3.45 மணிக்கு வர வேண்டிய விமானம் வழக்கம் போல் வந்து சென்றது. இந்த விமானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை செல்வதாக இருந்தது. ஆனால் கனமழை பெய்துக் கொண்டிருந்ததால் அவர் தூத்துக்குடி வராமல் கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் வழியாக சென்றவிட்டார்.

மாணவர்கள் திண்டாட்டம்:

கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அறிவித்து பகல் 12 மணியளவில் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து பள்ளிகளில் மாணவ, மாணவியரை உடனடியாக வீடுகளுக்கு செல்லுமாறு அனுப்பினர். மேலும் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்து மாணவ, மாணவியரை அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

ஆனால் அந்த நேரத்தில் மிக கனமழை கொட்டிக் கொண்டிருந்ததால் மாணவ, மாணவியரும், பெற்றோரும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாயினர். தூத்துக்குடியில் உள்ள பெரும்பாலான பள்ளி வளாகங்கள் மற்றும் பள்ளிகளை சுற்றியுள்ள சாலைகளில் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றதால் மாணவ, மாணவியர் அந்த தண்ணீரை கடந்து செல்வதில் பெரும் சிரமப்பட்டனர். 12 மணிக்கு மேல் விடுமுறை விடப்பட்ட போதிலும் சில இடங்களில் மாணவ, மாணவியர் மாலை 4 மணிக்கு மேல் தான் வீடு போய் சேர முடிந்தது.

ஏற்கனவே கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் மாவட்ட நிர்வாகம் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்காததால் மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் திண்டாடும் நிலை ஏற்பட்டதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். வரும் காலங்களில் இதுபோல நடைபெறாமல் முன்கூட்டியே விடுமுறை அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காயல்பட்டினத்தில் 246 மி.மீ., மழை:

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): காயல்பட்டினம் 246, திருச்செந்தூர் 217, ஸ்ரீவைகுண்டம் 138, குலசேகரன்பட்டினம் 135, சாத்தான்குளம் 105, ஓட்டப்பிடாரம் 99, தூத்துக்குடி 95.8, மணியாச்சி 79, வைப்பார் 75, வேடநத்தம் 66, கடம்பூர் 59, சூரன்குடி 48, கோவில்பட்டி 45, கீழ அரசடி 40, காடல்குடி 39, கயத்தாறு 36, விளாத்திகுளம் 35, கழுகுமலை 22, எட்டயபுரம் 19.3 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 246 மி.மீ. மழையும், குறைந்தபட்சமாக எட்டயபுரத்தில் 19.3 மி.மீ. மழையும் பெய்துள்ளது. 10 மணி நேரத்தில் மாவட்டத்தில் மொத்தம் 1599.10 மி.மீ. மழை பெய்துள்ளது. சராசரியாக 84.16 மி.மீ. மழை பெய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்