ஆயுள் தண்டனைக் கைதிகள் முன்விடுதலையை உரிமையாகக் கருத முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

By கி.மகாராஜன்

ஆயுள் தண்டனைக் கைதிகள் முன் விடுதலையை உரிமையாகக் கோர முடியாது என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சேலத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. 5 ரிமாண்ட் கைதிகளை வெடிகுண்டு வீசிக் கொலை செய்த வழக்கில் சேலம் நீதிமன்றம் இவருக்கு 5 ஆயுள் தண்டனை விதித்தது. இதை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மூர்த்தி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் 10 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதனடிப்படையில் மூர்த்தியை விடுதலை செய்யக் கோரி அவரது மனைவி மாரியம்மாள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயசந்திரன் ஆகியோர் விசாரித்தனர்.

அரசுத் தரப்பில், ''மனுதாரரின் கணவர் மத்திய அரசின் வெடிபொருள் சட்டத்தின் கீழும் தண்டனை பெற்றுள்ளார். இந்தச் சட்டத்தின் கீழ் தண்டனை பெறாதவர்களைத்தான் முன்கூட்டிய விடுதலைக்குப் பரிசீலிக்க முடியும். 14 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான ஆலோசனைக் குழு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கரோனா காலம் என்பதால் ஆலோசனைக் குழுவின் பரிசீலனை நடக்கவில்லை'' எனக் கூறப்பட்டது.

மனுதாரர் தரப்பில், ''மனுதாரர் 17 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் உள்ளார். 5 ஆயுள் தண்டனை என்றாலும், ஏககாலத்தில்தான் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, முன்கூட்டிய விடுதலை கோர முடியும்'' என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''தண்டனை பெற்றவர்கள் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்பதை உரிமையாகக் கோர முடியாது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் காலத்திற்கானது. இதில், முன்கூட்டிய விடுதலை என்பது சட்டத்திற்கு உட்பட்ட அரசின் முடிவைச் சேர்ந்தது.

எனவே, ஆயுள் சிறைவாசிகளின் முன்கூட்டிய விடுதலை தொடர்பாக, அரசு விரைவில் சிறை விதிகளுக்கு உட்பட்டுப் பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுக்கப்பட்ட முடிவைத் தெரியப்படுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

16 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்