குரூப் 4 தேர்வு முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கும் தொடர்பில்லை என உயர் நீதிமன்றக் கிளையில் சிபிசிஐடி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமதுரஷ்வி, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கறிஞர் முகமதுரஷ்வி தனது மனுவில், தமிழகத்தில் 2019-ல் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சுமார் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வில் ராமேஸ்வரம் தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தத் தேர்வில் மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரிக்கின்றனர். சிபிசிஐடி போலீஸார் சரியாக விசாரிக்கவில்லை. எனவே, குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
இவ்வழக்கில் சிபிசிஐடி டிஎஸ்பி டி.புருஷோத்தமன் பதில் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில் கூறியிருப்பதாவது:
டிஎன்பிஎஸ்சி நடத்திய குரு்ப் 4 தேர்வில் 99 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒருவர் இறந்துவிட்டார். 98 விண்ணப்பதாரர், 2 டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள், விடைத்தாட்களை ஏற்றிச் சென்ற வாகன ஓட்டுனர் என 118 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த முறைகேட்டில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா? என்பது குறித்து சிபிசிஐடி முழுமையாக விசாரணை நடத்தியது. அதில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் பணியில் கவனக்குறைவாக இருந்துள்ளனர். முறைகேட்டில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தொடர்பு இல்லை. இருப்பினும் பணியில் கவனக்குறைவாக இருந்த அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிபிசிஐடி போலீஸார் 191 சாட்சிகளிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஓஎம்ஆர் விடைத்தாள், செல்போன், லேப்டாப் ஆகியன தடயவில் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் வந்ததும் விசாரணை விரைவில் முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.