நீர் வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியிலிருந்து உபரி நீர் வெளியேற்றம்: பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவும் அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கனமழை காரணமாக நீர் வரத்து அதிகரிப்பால் புழல் ஏரியிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று புழல் ஏரி. 20.86 சதுர கி.மீ. பரப்பளவில் உள்ள இந்த ஏரியில், கிருஷ்ணா நீரால் ஏற்கெனவே நீர் இருப்பு அதிகரித்திருந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் புழல் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது.ஆகவே, 21.20 அடி உயரமும், 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி, நீர்மட்டம் 19.30 அடியாகவும், நீர் இருப்பு 2,872 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. அப்போது, விநாடிக்கு 1,487 கன அடி என இருந்து வந்த நீர் வரத்து படிப்படியாக அதிகரித்து, விநாடிக்கு 2,200 கன அடியாக உயர்ந்தது.

இதையடுத்து, புழல் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 11 மணியளவில் விநாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. தொடர்ந்து, நீர் வரத்து அதிகரித்து வந்ததால், புழல் ஏரியிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டது.

புழல் ஏரியில் திறக்கப்பட்டுள்ள உபரிநீர், 8.5 கி.மீ. நீளமுள்ள புழல் ஏரி உபரிநீர் கால்வாய் மூலம் தண்டல்கழனி, வடகரை, கிராண்ட்லைன், வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், மாத்தூர், கொசப்பூர், மணலி உள்ளிட்ட பகுதிகள் வழியாக, சென்னை- எண்ணூர் பகுதியில் கடலில் சேரும்.

ஆகவே, உபரிநீர் கால்வாய் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இச்சூழலில், நேற்று காலை 8 மணியளவில், 35 அடி உயரமும், 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவும் கொண்ட பூண்டி ஏரியின் நீர் மட்டம் 34.20 அடியாகவும், நீர் இருப்பு 2,886 மில்லியன் கன அடியாகவும் இருந்தது. பூண்டி ஏரியிலிருந்து உபரி நீர் திறப்பு, நேற்று மாலை 4.30 மணி நிலவரப்படி விநாடிக்கு 4,870 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

மேலும், நீர் வளத்துறையின் முதன்மை செயலாளர் சந்தீப் சக்சேனா, மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், கடல்சார் வாரிய துணைத் தலைவருமான பாஸ்கரன் ஆகியோர், புழல் மற்றும் பூண்டி ஏரிகளின் நீர் இருப்பு, மதகுகள் மற்றும் கரைகளின் உறுதி தன்மை உள்ளிட்டவை குறித்து நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், நீர் வளத்துறையின் சென்னை மண்டல தலைமை பொறியாளர் முரளிதரன், பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பாளர் முத்தையா, கொசஸ்தலை ஆறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் பொதுபணித்திலகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதேபோல், கடந்த 4-ம் தேதி முதல் சோழவரம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் உபரிநீரின் அளவு, நேற்று பகல் 12 மணியளவில் விநாடிக்கு 1,200 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம்- பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்திலிருந்து, விநாடிக்கு 1,200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் முதல் முறையாக முழு கொள்ளளவை எட்டியது. விநாடிக்கு 80 கன அடி உபரிநீர் வெளியேறுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

43 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்