அணுமின் நிலையத்தில் சக ஊழியர்களை சுட்டுக் கொன்ற சிஐஎஸ்எப் வீரருக்கு விதிக்கப்பட்ட 3 ஆயுள் தண்டனை ரத்து

By செய்திப்பிரிவு

சென்னை கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் கடந்த 2014-ம் ஆண்டு அக்.8-ம் தேதி அதிகாலை 4 மணியளவில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் தலைமைக் காவலரான விஜய் பிரதாப் சிங் என்பவர் திடீரென தனது துப்பாக்கியால் சக ஊழியர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டார்.

இதில் சிஐஎஸ்எப் தலைமைக் காவலர்களான மோகன் சிங், சுப்புராஜ், உதவி எஸ்ஐ கணேசன் ஆகியோர் உயிரிழந்தனர். அதையடுத்து விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம், விஜய் பிரதாப் சிங்குக்கு 3 ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து விஜய் பிரதாப் சிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆ.என்.மஞ்சுளாஆகியோர் அடங்கிய அமர்வு, “சிஐஎஸ்எப் தலைமைக் காவலரான விஜய் பிரதாப்சிங், கடந்த 2012-ம் ஆண்டுமுதல் நாள்பட்ட மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதற்கான மருத்துவ சான்றுகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த உண்மை தெரியாமல் துப்பாக்கியை கையாள அவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை அனுமதியளித்துள்ளது. இந்த மனநோய் குறித்த உண்மைகளை செங்கல்பட்டு நீதிமன்றமும் மதிப்பிடத் தவறியுள்ளது.

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் கூட,மனநலம் குன்றிய குற்றவாளிக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே மனநலம் பாதிக்கப்பட்ட நபரானவிஜய பிரதாப் சிங்குக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை ரத்து செய்யப்படுகிறது.

அதேநேரம் இதச பிரிவு 84-ல் உள்ள விதிவிலக்கைப் பயன்படுத்தி குற்றம் சாட்டப்பட்ட நபர் தண்டனையில் இருந்து தப்பித்தாலும், சமூகத்தில் சுதந்திரமாக உலவுவதை அனுமதிக்க முடியாது. எனவே விஜய் பிரதாப் சிங்கை சொந்த ஊரான உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் உள்ளஅரசு மனநல மருத்துவமனைக்கு மாற்றி தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே இழப்பீடாக வழங்கியுள்ள ரூ.10 லட்சத்துடன், தமிழகஅரசும் ரூ.3 லட்சத்தை இழப்பீடாக வழங்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE