விரைவில் மாநிலம் முழுவதும் கோமாரி தடுப்பூசி முகாம்: கால்நடை துறை தகவல்

By செய்திப்பிரிவு

விரைவில் மாநிலம் முழுவதும் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து முகாம் நடத்தப்படும் என கால்நடை பராமரிப்பு (மற்றும்) மருத்துவப்பணிகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்துவ முகாம் மேற்கொள்வது தொடர்பான செய்தி வெளியீடு

தேசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ்க் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து நூறு சதவிகித மானியத்தில் இலவசமாக மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் இருமுறை மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால்நடைகளுக்குக் கோமாரி நோய்த் தடுப்பூசி போடப்படுகிறது.

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக ஒன்றிய அரசு கோமாரி நோய் தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது காரணமாக கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம்கள் மேற்கொள்வதில் இடைவெளி ஏற்பட்டுள்ளது.

எனினும் தமிழகக் கால்நடைப் பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனைகளின் குளிர்பதன அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள கோமாரி நோய்த் தடுப்பூசி மருந்து கையிருப்பினைக் கொண்டு, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நூறு சதவிகிதம் தடுப்பூசிப்பணி நிறைவடைந்துள்ளது.

மேலும், கேரளா, கர்நாடகா மாநிலங்களின் எல்லையோர மாவட்டங்களான தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தென்காசி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கோமாரி நோய் அதிகம் தாக்கம் ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சுமார் 2.68 இலட்சம் அளவில் கோமாரி தடுப்பூசி கால்நடைகளுக்குப் போடப்பட்டுள்ளது.

மேலும் தற்போது மத்திய அரசு மூலம் 13.79 இலட்சம் அளவில் கோமாரி தடுப்பூசி மருந்து பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களுக்கும் கோமாரி தடுப்பூசி மருந்து பெற்று வழங்க தமிழக அரசின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விரைவில் கோமாரி தடுப்பு மருந்து மத்திய அரசு மூலம் பெறப்பட்டுக் கோமாரி நோய்த் தடுப்பு மருந்து முகாம்கள் நடத்தப்படும்.
கால்நடை விவசாயிகள் தத்தம் கால்நடைகளையும் மற்றும் அதன் கொட்டகைகளையும் சுகாதார முறையில் பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். கால்நடைகளில் சுகவீனம் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

கால்நடை வளர்ப்போர் அனைவரும் பயனடையும் வண்ணம் இத்துறை உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE