ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுத்து நிறுத்த உடனடியாக புதிய சட்டம் இயற்ற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

By செய்திப்பிரிவு

தொடரும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுத்து நிறுத்த உடனடியாக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்ற மென்பொருள் பொறியாளர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு எனது ஆறுதல்கள்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அப்பாவி இளைஞர்கள் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தவாறு குறைகள் இல்லாத புதிய சட்டத்தை இயற்றுவது தான் ஒரே தீர்வு. அதை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் செல்லாது என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருப்பதால் பயனில்லை. தமிழ்நாட்டு இளைஞர்களை காக்க உடனடியாக ஆன்லைன் சூதாட்டத் தடைக்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், புருஷோத்தமகுப்பம் அடுத்த காட்டுக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவலிங்கம் (62). இவரது மகன் ஆனந்தன்(30). சென்னையில் ஐடி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் ரம்மி விளையாட்டில் பங்கேற்ற ஆனந்தன் ரம்மி விளையாட தொடங்கினார். ஆரம்பத்தில் ரம்மி விளையாட்டில் கொஞ்சம் பணத்தை சம்பாதித்த ஆனந்தன் தொடர்ந்து பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி பகல், இரவு பாராமல் ரம்மி விளையாட்டில் மூழ்கினார்.

வேலை நேரம் போக செல்போனில் எந்த நேரமும் ரம்மி விளையாட்டில் பணத்தைக் கட்டி விளையாடத்தொடங்கினார். இதனால், சம்பாதிக்கும் பணத்தை ரம்மி விளையாட்டில் அவர் இழந்தார். வீட்டுச்செலவுக்கு கூட பணம் அனுப்ப முடியாத நிலைக்கு ஆளானார். இது குறித்து பெற்றோர் கேட்டபோதெல்லாம் கரோனா காரணமாக வேலை செய்யும் நிறுவனத்தில் சம்பளம் தரவில்லை. விரைவில் கொடுப்பார்கள் எனக்கூறி சமாளித்து வந்தாக தெரிகிறது.

ஆன்லைன் விளையாட்டில் ஏறத்தாழ 10 லட்சம் வரை பணத்தை இழந்த ஆனந்தன், நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலரிடம் ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கி அந்த பணத்தை கொண்டு ஆன்லைன் மூலம் ரம்மி விளையாடி வந்தார்.

கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நச்சரிக்கத்தொடங்கினர். இந்த கடனை திருப்பி கொடுக்க மேலும், மேலும் கடன் வாங்கி ரூ.10 லட்சம் வரை ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு ஆனந்தன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

நேற்று நடைபெற்ற 2-ம் கட்ட வாக்குப்பதிவில் கலந்து கொண்டு ஆனந்தன் வாக்களித்தார். பிறகு சென்னை திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்தார். அப்போது, தன் குடும்பத்தாரிடம் தனக்கு நிறைய கடன் ஏற்பட்டுள்ளதால், கொஞ்சம் பணம் தேவை எனக்கேட்டபோது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. பெற்றோர், குடும்பத்தினர் விசாரித்தபோது ஆனந்தன் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சணக்கணக்கான பணத்தை இழந்து கடனாளியாக மாறியிருப்பது தெரியவந்தது.

இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தார் அவரை கண்டித்தனர். இதனால், மனமுடைந்த ஆனந்தன் நேற்றிரவு தனது அறைக்கு உறங்கச்சென்றவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை ஆனந்தனை எழுப்பச்சென்ற பெற்றோர் இதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

இது குறித்து வந்த புகாரின் பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து ஆனந்தன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடனாளியாக மாறிய ஆனந்தன் தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் வாணியம்பாடியில் நேற்று சோகத்தை ஏற்படுத்தியது, பல பேரின் உயிரை பறிக்கும் ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டுக்கு தமிழக அரசு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

4 hours ago

மேலும்