கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலாவை விசாரிக்க வலியுறுத்தி வழக்கு: போலீஸார் பதிலளிக்க 4 வாரம் அவகாசம்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்கவலியுறுத்தி தொடரப்பட்ட வழக்கில், போலீஸார் பதிலளிக்க 4 வாரகால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்.23 அன்று நள்ளிரவில் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டு, ஆவணங்கள் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

வழக்குப் பதிவு

இதுதொடர்பாக ஷோலூர்மட்டம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கேரளாவைச் சேர்ந்த சயான், மனோஜ் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன், நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியர் சங்கர், முன்னாள் எஸ்பி முரளிரம்பா, அதிமுக நிர்வாகி சஜீவன், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் மற்றும் சுனில் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என அனுமதி கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ள தீபு, சதீசன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீலகிரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால் நீலகிரி நீதிமன்றம் எஸ்டேட் மேலாளர் நடராஜனை மட்டும் விசாரிக்க அனுமதியளித்தது. மற்றவர்களை விசாரிக்க அனுமதி மறுத்தது.

இதை எதிர்த்து மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளை போலீஸார் தப்பவிட்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை விசாரிக்க வேண்டும், என கோரியிருந்தனர்.

விசாரணை தள்ளிவைப்பு

இந்த வழக்கு நேற்று நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இதுதொடர்பாக பதிலளிக்க காவல்துறை தரப்பில்4 வாரகால அவகாசம் கோரப்பட்டது. அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE