சங்ககாலப் பெண் புலவர் குறமகள்‌ இளவெயினிக்கு நூலகம், சிலை, மணிமண்டபம்: ஓபிஎஸ் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

சங்ககாலப் பெண் புலவர் குறமகள்‌ இளவெயினிக்கு நூலகத்துடன்‌ கூடிய முழு உருவச்சிலையும் மணிமண்டபமும் அமைக்க வேண்டும் என்று ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர்‌ ஓ.பன்னீர்செல்வம்‌ வெளியிட்டுள்ள அறிக்கை:

''சங்க காலத்தில்‌, குறவர்‌ குடியிலே பெண்ணாகப்‌ பிறந்து, இளமைக்‌ காலத்திலேயே புலமை பெற்று, பெரும்‌ புலவராய்‌ விளங்கியவரும்‌, உலகில்‌ மூத்த மொழியாக விளங்குகின்ற தமிழ்‌ மொழியை வளர்ப்பதில்‌ தன்னுடைய பங்களிப்பை நல்கியவரும்‌, சங்க கால மன்னர்களால்‌ போற்றப்பட்டவரும்‌, தமிழர்களுக்கும்‌, தமிழ்‌ மொழிக்கும்‌ பெருமை சேர்த்தவருமான பெண்பாற்‌ புலவர்‌ குறமகள்‌ இளவெயினி,‌ இரண்டாம்‌ நூற்றாண்டில்‌ பதினைந்துக்கும்‌ மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்‌.

இவருடைய பாடல்கள்‌ குறித்தும்‌, இவர்‌ தமிழர்‌ பழங்குடி மரபைச்‌ சேர்ந்தவர்‌ என்பது குறித்தும்‌ புறநானூற்றின்‌ 157-வது பாடலில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னுடைய தலைவன்‌ ஏறைக்கோனைப்‌ பாராட்டும்‌ பாடலில்‌, நம்மோடு நட்பு கொண்டு நெடுநாள்‌ பழகி வாழ்பவர்‌ ஒரு முறை தவறு செய்துவிட்டால்‌ அவரைப்‌ பகைத்துக்‌ கொண்டு அவருக்கு துயர்‌ தருதல்‌ சான்றோர்‌ செயல்‌ அல்ல என்றும்‌ ; "நாடெல்லாம்‌ வாழ கேடொன்றும்‌ இல்லை" என்ற உண்மையை உணர்ந்து தன்னைப்‌ போன்றே உலகோர்‌ அனைவரும்‌ உயர்ந்து வாழ வேண்டும்‌ என்று விரும்பி அதற்காக உழைப்பதே தனக்கும்‌ பிறர்க்கும்‌ நலம் தருவதாம்‌ என்றும்‌; "எப்படியாவது வெற்றி பெற வேண்டும்,‌ எம்முறையைக்‌ கையாண்டாவது வெற்றி பெற வேண்டும்‌" என்பது பேடிச்‌ செயல்‌ என்பதோடு, உண்மை வீரன்‌, வெற்றி தரும்‌ வழி பழி தரும்‌ வழியாக இருத்தல் கூடாது என்ற கருத்தினைக்‌ கொண்டிருப்பான்‌ என்றும்‌ தெரிவித்து, இந்த முப்பெரும்‌ குணங்களை தன்‌ தலைவன்‌ பெற்றிருக்கிறான்‌ என்று தெரிவித்து உலக உயர்விற்கு வழிகாட்டியாய்‌ நின்று அறிவுரை கூறியவர்‌ பெண்பாற்‌ புலவர்‌ குறமகள்‌ இளவெயினி.

தமிழ்‌ இலக்கியத்திற்கு குறமகள்‌ இளவெயினி‌ ஆற்றிய பணியைப் போற்றிடும்‌ வகையில்‌, அவர்‌ உருவாக்கிய இலக்கியப்‌ பாடல்கள்‌ மற்றும்‌ அவரது முழு உருவப் படத்தை பன்னிரெண்டாம்‌ வகுப்பு தமிழ்ப்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ 2019ஆம்‌ ஆண்டு சேர்த்து, அதன்மூலம்‌ அவருக்கு ஓர்‌ அங்கீகாரத்தை அதிமுக அரசு வழங்கியது.

இந்தச்‌ சூழ்நிலையில்‌, அவரது நினைவைப் போற்றிடும்‌ வகையிலும்‌, அவரது புகழுக்கு மேலும்‌ பெருமை சேர்த்திடும்‌ வகையிலும்‌, தமிழ்‌ மொழிக்கான இவரது பங்களிப்பை அனைவரும்‌ அறிந்துகொள்ளும் வண்ணமும்‌, சங்கம்‌ வைத்துத் தமிழ்‌ வளர்த்த மதுரையில்‌ பெண்பாற் புலவர்‌ குறமகள்‌ இளவெயினிக்கு நூலகத்தோடு கூடிய முழு உருவச்‌ சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை நிறுவ வேண்டும்‌ என்று பொதுமக்கள்‌ சார்பிலும்‌, வனவேங்கைகள்‌ கட்சி சார்பிலும்‌ எனக்கு வேண்டுகோள்‌ விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை உயர்‌ நீதிமன்ற மதுரைக் கிளையில்‌ வழக்கு ஒன்று தொடரப்பட்டு, அந்த மனுவின்‌ மீது மதுரை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையர்‌ ஆகியோர்‌ பதில்‌ அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சங்க காலத்திலேயே தமிழர்‌ பழங்குடி மரபைச்‌ சார்ந்த பெண்‌ ஒருவர்‌ புலவராய்‌ விளங்கினார்‌ என்பது பாராட்டிற்கும்‌, போற்றுதலுக்கும்‌ உரிய ஒரு செயல்‌ என்பதால்‌, குறமகள்‌ இளவெயினிக்கு 'சங்கம்‌ தமிழ்‌ வளர்த்த' மதுரையில்‌ நூலகத்துடன்‌ கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைப்பது மிகவும்‌ பொருத்தமாக இருக்கும்‌.

எனவே, தமிழ்நாடு முதல்வர்‌ இந்தக்‌ கோரிக்கையை உடனடியாகப் பரிசீலித்து, தமிழுக்குப்‌ பெருமை சேர்க்கும்‌ வகையில்‌, பெண்பாற்‌ புலவர்‌ குறமகள்‌ இளவெயினிக்கு மதுரையில்‌ நூலகத்துடன்‌ கூடிய முழு உருவச்சிலை தாங்கிய நினைவு மண்டபத்தை அமைக்க வழிவகை செய்ய வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்''‌.

இவ்வாறு ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

25 mins ago

கல்வி

1 hour ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்