சிறப்பு தபால் தலை, அஞ்சல் அட்டை வெளியீடு; தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி நூற்றாண்டு விழா: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

நாட்டின் பழமையான மற்றும் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (டிஎம்பி) தனது நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை தூத்துக்குடியில் நேற்று முன்தினம் தொடங்கியது.

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விழாவை தொடங்கி வைத்தார். வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி.ராமமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர்கள், அஞ்சல் துறையின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ஜி.நடராஜன், ஐபிஓஎஸ், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தனித்துவம் மிக்க டிஎம்பி தபால்தலை மற்றும் பிரத்யேக அஞ்சல்அட்டையை அமைச்சர் வெளியிட்டார். மேலும் பணம் எடுத்தல், பணம் செலுத்துதல் உள்ளிட்ட சேவைகளை வாடிக்கையாளர்கள் அவர்களின் வசிப்பிடங்களிலேயே நேரடியாக பெற உதவும் ‘டிஎம்பிமொபைல் டிஜிலாபி’ வாகனத்தையும் அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் டிஎம்பி வங்கி மற்றும் டைம்ஸ் நெட்வொர்க் இணைந்து மேற்கொள்ளும் நடமாடும் தடுப்பூசி வாகனத்தையும் அமைச்சர் தொடங்கிவைத்தார். இறுதியாக மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறை நிறுவனங்களுக்கு கடனுதவிகளை மத்திய நிதி அமைச்சர் வழங்கினார். 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE