பெண்கள் புதிய நண்பர்களுடன் பழகும்போது எச்சரிக்கையாக இருப்பதுடன், அவர்கள் என்ன உதவி செய்வதாகக் கூறினாலும் நம்பி, யார் துணையும் இல்லாமல் அவர்களுடன் தனியாகச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று காவல் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ரம்யா (19) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தனியார் கடை ஒன்றில் பணி செய்து வருகிறார். அப்போது அந்தக் கடைக்கு அடிக்கடி வரும் பெரிய காஞ்சிபுரம் வணிகர் தெருவைச் சேர்ந்த குணசீலன்(23) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்படுகிறது. இருவரும் தங்களது செல்போன் எண்ணை பரிமாறிக் கொண்டு அடிக்கடி பேசுகின்றனர். இந்தச் சூழ்நிலையில் அந்தப் பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாகவும், உதவிகள் செய்வதாகவும் குணசீலன் கூறுகிறார். இதனை நம்பி அந்தப் பெண்ணும் அவருடன் நெருங்கிப் பழகுகிறார்.
இந்தச் சூழ்நிலையில் அந்தப் பெண் பண உதவி கேட்க, குணசீலன் அந்தப் பெண்ணை பண உதவி செய்ய அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, மேல்கதிர்பூர் வயல்வெளிப் பகுதிக்கு காரில் அழைத்துச் செல்கிறார். குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்கப்பட்டு, அந்தப் பெண், குணசீலனால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்.
இதனைத் தொடர்ந்து இவரது நண்பர்கள் சிறுவள்ளூர் மேட்டுக் காலனி பகுதியைச் சேர்ந்த ஜெபநேசன்(எ) சார்லஸ்(29), ஓரிக்கை குணசேகரன்(24), காஞ்சிபுரம், கச்சபேஸ்வரர் மாடத் தெருவைச் சேர்ந்த அஜீத்குமார்(23) , பெரிய காஞ்சிபுரம் காமராஜ்(24) ஆகியோராலும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிறார்,
அந்தப் பெண்ணின் சப்தம் கேட்டு, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பெண்ணை மீட்டனர். இதுதொடர்பாக பாலுசெட்டி சத்திரம் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் கொடுத்ததன் அடிப்படையில் குணசீலன், ஜெபநேசன், சார்லஸ், குணசேகரன் ஆகிய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். காமராஜ் தப்பியோடிவிட்டார். அவர்கள் மீது மிரட்டுதல், கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை செய்தல் ஆகிய 3 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
எஸ்பி எச்சரிக்கை
இதுகுறித்து காஞ்சிபுரம் எஸ்பி சுதாகர் கூறும்போது, “புதிய நண்பர்களுடன் பெண்கள் எச்சரிக்கையுடன் பழக வேண்டும். பழக்கம் இல்லாத நபர்கள் உதவி செய்வதாகக் கூறினாலும் அவர்களை நம்பி செல்லக் கூடாது. சமூக விரோதிகளும் உதவி செய்வதுபோல் நாடகமாடி பழகுவதற்கு வாய்ப்பு உள்ளது. சம்பவம் கடந்த 1-ம் தேதி நடைபெற்றாலும் இந்தப் பெண் கடந்த 8-ம் தேதிதான் புகார் கொடுத்துள்ளார். இதுபோன்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்தால், பெண்கள் தைரியாக புகார் கொடுக்க வேண்டும். அவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படும். மேலும் உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்யவும் முடியும்” என்றார்.
இதுகுறித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் சௌந்தரி கூறும்போது, “கைது செய்யப்பட்டவர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும். பெண்கள் பணி செய்யும் இடங்களில் பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, விசாகா கமிட்டி அமைக்க வேண்டும். அவர்கள் பணி செய்யும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களைபொருத்த வேண்டும்” என்றார்.