சிற்றுந்து மோதி விபத்து: நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி பலி

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் அருகே சிற்றுந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த நான்கரை வயது சிறுமி தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பழவஞ்சிபாளையம் வேலன் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (37). இவரது மனைவி தீபா. தம்பதியருக்கு தக்‌ஷனா எனும் நான்கரை வயதில் பெண் குழந்தை இருந்தார். இந்த நிலையில், சுரேஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி தீபா மற்றும் மகள் தக்‌ஷனா ஆகியோர், இருசக்கர வாகனத்தில் பூம்புகார் நகரில் உள்ள மாமியார் வீட்டுக்கு இன்று (செப். 11) வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஆட்சியர் அலுவலகம் தாண்டியதும், பின்னோக்கி வந்த சிற்றுந்து, அதிவேகமாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, சாலையின் இடதுபக்கம் தீபா செல்லும்போது, அங்கு நின்றுகொண்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனம் மோதி நிலை தடுமாறியது.

இந்த நிலையில், சிற்றுந்தின் பின்சக்கரத்தில் சிறுமி தக்‌ஷனா விழ, சிறுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாய் தீபா, சில அடி தூரம் இருசக்கர வாகனத்தில் இழுத்துச் செல்லப்பட்டதில் படுகாயம் அடைந்தார். ஆட்சியர் அலுவலகம் அடுத்துள்ள பூம்புகார் நகர் அருகிலேயே விபத்து நிகழ்ந்ததால், சம்பவ இடத்தில் பொதுமக்கள் திரண்டனர். இதையடுத்து, அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.

தலை நசுங்கி சிறுமி உயிரிழந்ததால், அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் இச்சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். தாய் தீபா, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, சிற்றுந்தை திருப்பூர் தெற்கு காவல் நிலையத்துக்கு போலீஸார் எடுத்துச் சென்றனர். இது தொடர்பாக சிற்றுந்து வாகன ஓட்டுநரைப் பிடித்து, திருப்பூர் தெற்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

இது தொடர்பாக விபத்தை நேரில் பார்த்த சிலர், ''திருப்பூர் மாநகரில் போக்குவரத்து நடமாட்டத்துக்கு ஏற்ப சாலைகள் இல்லை. பலரும் அதிவேகமாக வாகனம் ஓட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக, மாவட்ட நிர்வாகப் பகுதியான ஆட்சியர் அலுவலகம் அருகிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சிற்றுந்துகள் தொடர்ந்து வேகமாக ஓட்டுவதால், பல்வேறு விபத்துகளை திருப்பூர் மாநகரம் சந்தித்துள்ளது. அதேபோல் இன்றைக்கு நான்கரை வயது சிறுமி மிகக் கொடூரமாக உயிரிழந்துள்ளார். மாநகரில் சிற்றுந்துகளின் வேகத்தைக் கட்டுப்படுத்த மாநகர போலீஸார் மற்றும் போக்குவரத்து போலீஸார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்