வெளிநாட்டில் மருத்துவப் படிப்பு; தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவிடக் கூடாது: மநீம

By செய்திப்பிரிவு

கரோனா போன்ற அசாதாரண சூழலில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவிடக் கூடாது என, மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, மாணவர் அணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ரா.ஷம்ஷேர் இன்று (செப்.02) வெளியிட்ட அறிக்கை:

"வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலானோர் தற்போது தமிழகத்தில் இருந்தவாறே இணையவழி வகுப்புகள் மூலம் பயின்று வருகின்றனர். ஒருசில நாடுகள், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி நம் மாணவர்களை மீண்டும் பயணிக்க அனுமதித்துள்ளன. அவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து பயின்றுவருகின்றனர். ஆனால், பெரும்பாலான நாடுகள் குறிப்பாக சீனா, இதுவரை இந்தியர்களுக்கு அனுமதி அளிக்க மறுத்துவருகிறது. இதனால், அங்கு மருத்துவம் பயிலும் மாணவர்கள் ஒன்றரை ஆண்டு கடந்த நிலையில் தொடர்ந்து இணையவழிக் கல்வியையே தொடர்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த டிசம்பர் 2020-ல் தமிழக மருத்துவ கவுன்சில் 'தற்போது வெளிநாடுகளில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் குறைந்தபட்சம் 4.5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பை 75% வருகையுடன் (attendance) முடித்திருக்க வேண்டும்' என்றும், 'இணையவழி வகுப்புகள் கணக்கில் சேர்க்கப்பட மாட்டாது' என்றும் ஒரு தீர்மானத்தை (TNMC/P.N 11/2020) நிறைவேற்றியது.

இத்தகைய மாணவர்களின் கடவுச்சீட்டு (Passport) சரிபார்க்கப்பட்டு, அவர்களது 5 ஆண்டு மருத்துவப் படிப்புக் காலத்தில் 4.5 ஆண்டுகள் அவர்கள் பயிலும் நாட்டில்தான் தங்கி இருந்தனர் என்பதும் உறுதிசெய்யப்படும் என்று கூறியிருப்பது மாணவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விதிகளின்படி தற்போது வெளிநாட்டுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், படிப்பை முடித்த பின்னர் தமிழகத்தில் மருத்துவம் பார்க்க முடியாத சூழல் ஏற்படும். அவர்களது படிப்பு இங்கு செல்லாது என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். 5 ஆண்டு படிப்பில் ஏற்கெனவே 1.5 ஆண்டுகள் இணையவழிக் கல்வியில் கழிந்துவிட்ட நிலையில், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

நம் மாணவர்கள் மீண்டும் சீனா போன்ற நாடுகளுக்குச் சென்று நேரடி வகுப்புகளைத் தொடரத் தயாராக இருந்தாலும், அந்தந்த நாடுகளின் கொள்கைகள் காரணமாக அவர்கள் செல்ல முடியாத சூழலில் உள்ளனர். நமது தமிழகக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் பயில தமிழக மருத்துவ கவுன்சில் அனுமதிக்கும்போது, அசாதாரண சூழலால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத தமிழக மாணவர்களின் இணைய வகுப்புகளையும் அனுமதிப்பதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். இதனைத் தமிழக அரசு கருத்தில் கொண்டு சரியான முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது மக்கள் நீதி மய்யம்.

மேலும், 5 ஆண்டுகள் படிப்பை முடித்த பின்னர் 1 ஆண்டு நேரடிப் பயிற்சியை (Internship) மாணவர்கள் பெற வேண்டும். தற்போது படிப்பை முடிக்கும் மாணவர்கள் தமிழகத்திலேயே பயிற்சி பெறத் தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுக்க வேண்டும்.

2020-ல் வெளிநாட்டுக் கல்லூரிகளில் படித்து முடித்த நம் தமிழக மாணவர்கள், FMGE (Foreign Medical Graduate Examination) என்னும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் பயிற்சி எடுக்க முடியாமல் வெளிமாநிலங்களுக்குச் சென்று பயிற்சி (Internship) எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இவர்களுக்குத் தமிழகத்தில் பயிற்சி பெற அனுமதி அளிக்காமல் அலைக்கழித்துவருகிறது தமிழக அரசு. அப்படியே அனுமதி கிடைத்தாலும் தமிழகத்தில் பயிற்சி பெற லட்சங்களில் செலவழிக்க வேண்டிய சூழல் உள்ளது. தமிழகத்தில் விதிக்கப்படும் பயிற்சிக் கட்டணம் சுமார் 6 லட்சம் வரை இருப்பதாகவும், பயிற்சி (Internship) பெறத் தேவையான NOC, தற்காலிகப் பதிவுச் சான்றிதழ் (Provisional Registration Certificate) போன்ற அனுமதிகளைப் பெறும் நடைமுறைகளுக்கு சுமார் 10 மாதங்கள் வரை ஆகிறது என்றும் வருந்துகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளைக் களைய தமிழகத்தில் பயிற்சிக் கட்டணம் குறைக்கப்பட்டு, பயிற்சி அனுமதிக்கான நடைமுறைகளும் சுலபமாக்கப்பட்டு, கால விரயம் ஆகாமல் தமிழக மாணவர்களுக்கு விரைவில் பயிற்சிக்கான அனுமதி கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

கரோனா போன்ற அசாதாரண சூழலில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்கும் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவிடக் கூடாது. தற்போது பயிலும் மாணவர்களின் இணையவழிக் கல்வியை அனுமதித்தும், படித்து முடித்த மாணவர்களின் பயிற்சிக்கு வழிவகுத்தும், தமிழக அரசு நல்ல முடிவினை மாணவர்களின் நலனில் அக்கறைகொண்டு எடுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு ராகேஷ் ரா.ஷம்ஷேர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்