சங்ககாலப் பழமை வாய்ந்த பொற்பனைக் கோட்டையில் அகழாய்வுப் பணி தொடக்கம்: அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

By கே.சுரேஷ்

புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு செய்யும் பணியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (ஜூலை 30) தொடங்கி வைத்தார்.

கோட்டை, கொத்தளங்களோடு உள்ள பொற்பனைக் கோட்டையில் அகழாய்வு செய்வதற்கு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்ததையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் தலைமையில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது.

இதற்காக இடம் தேர்வு செய்தல் போன்ற முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வந்தன. அதன்படி, இனியன், தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன், அகழாய்வுப் பணி மேற்பார்வையாளர் ஆர்.அன்பழகன், வேப்பங்குடி ஊராட்சித் தலைவர் ராஜாங்கம் உள்ளிட்டோர், அகழாய்வு நடைபெற உள்ள இடத்தில் மேலாய்வுப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, சங்க காலத்தைச் சேர்ந்த பச்சை, கருஞ்சிவப்பு, ஊதா, பழுப்பு, கருப்பு, இளமஞ்சள் போன்ற வண்ணங்களில் மணிகள் கிடைத்துள்ளன. மேலும், கருப்பு, ஊதா வண்ண வளையல்களின் உடைந்த பகுதிகள், உருக்கு மூலம் உருவாக்கப்பட்ட இரும்புத் துண்டுகள், நிறமற்ற கண்ணாடிப் படிகம், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் கிடைத்துள்ளன.

மேலும், தட்டு, கிண்ணம், கலயங்களின் உடைந்த பகுதிகள், உருக்கு உலையின் அடிமானங்கள், உலோகக் கழிவுகளும் கிடைத்துள்ளன.

இந்நிலையில், ஆட்சியர் கவிதா ராமு தலைமையில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் இன்று (ஜூலை 30) தொடங்கி வைத்தார்.

பொற்பனைக் கோட்டையில் நடைபெற்று வரும் அகழாய்வு பணி.

அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

"தமிழர்களின் பாரம்பரியங்களை வெளிக்கொண்டு வருவது, பாதுகாப்பது, அடையாளப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு துணை நிற்கும். இதேபோன்று, பொற்பனைக் கோட்டையில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுப் பணியை முழுமையாக மேற்கொள்வதற்குத் தேவையான நிதி, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். சங்ககால இடமான பொற்பனைக் கோட்டை எனது தொகுதியில் (ஆலங்குடி) அமைந்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி" என்றார்.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகையில், "அகழாய்வுக்கு முன்னதாக, அதன் மேற்பரப்பில் இத்தகைய சங்க காலத்தைச் சேர்ந்த பொருட்கள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே, தொழில்நுட்பக் கருவி மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவின் அடிப்படையில், அகழாய்வுக்கான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே பல்வேறு இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்றிருந்தாலும்கூட நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது முதல் முறையாக இங்கு அகழாய்வு நடைபெறுகிறது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

வாழ்வியல்

32 mins ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்