2 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவு: விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்ப்பு

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரத்தில் 2 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ரயில்வே மேம்பாலப் பணிகள் நிறைவுற்றன. இதனால் ரயில்கள்செல்லும் நேரங்களில் வாகனங்கள் காத்திருக்கும் நிலையும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலும் விரைவில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, பூந்தமல்லி, சுங்குவார்சத்திரம், பெரும்புதூர் போன்ற பகுதிகளுக்கு, புதிய ரயில் நிலையம் வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. அவ்வாறு செல்லும் வாகனங்கள் ரயில் வரும் நேரத்தில் ரயில்வே கேட் மூடப்படுவதால் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் புதிய ரயில் நிலையம் வழியாக சென்னை செல்லும் சாலை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக மாறியது.

இதனால் இந்தப் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதன்படி புதிய மேம்பாலம் கட்ட தமிழக அரசு ரூ.50 கோடியே 78 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த மேம்பாலம் கட்டுவதற்காக கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்த மேம்பாலம் பொன்னேரி ஏரியில் இருந்து ஒரு கிமீ தூரத்துக்கு கட்டப்படுகிறது. கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு வரை இந்த மேம்பாலம் கட்டப்பட்டது. ரயில்வே தண்டவாளம் தவிர்த்து இரு பகுதிகளிலும் மேம்பாலப் பணிகள் பெருமளவு முடிந்துவிட்டன. ரயில்வே தண்டவாளத்தின் மேல் கட்டப்படும் பணிகள் மட்டும் தொடங்கப்படாமல் இருந்தன. ரயில் பாதைக்குமேல் பகுதியில் ரயில்வே நிர்வாகம்அதற்கான பணிகளை செய்ய வேண்டும் என்பதால் காலதாமதம் ஆனது.

இதனால் இந்த ரயில்வே மேம்பாலப் பணி கடந்த 2 ஆண்டுகளாக இழுபறியில் இருந்தது. இந்தச் சூழ்நிலையில் பல்வேறு தரப்பினரின் கோரிக்கையைத் தொடர்ந்து தண்டவாளத்தின் மேல் பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டு அதன் இரு பகுதிகளுக்கும் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்தப்மேம்பாலப் பணி ஏறக்குறையமுழுமையாக முடிவடைந்துவிட்டதால் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான புதியரயில் நிலையம் அருகே மேம்பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. விரைவில் இந்த பாலத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்றுசமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE