ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்றலாம்; தமிழகத்தில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு: பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊரடங்கு இன்று முதல் வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரை தளர்வுகளுடன் நீட்டிக்கப்படுகிறது. ஐடிஐ-க்கள் 50 சதவீத மாணவர்களுடன் இயங்கலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (ஜூலை 19) காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கு வரும் 31-ம் தேதி காலை 6 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.

l புதுச்சேரி நீங்கலாக தனியார்மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து, மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் தவிர, சர்வதேச விமான போக்குவரத்து ஆகியவற்றுக்கு தடை நீடிக்கிறது.

l திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், உயிரியல் பூங்காக்கள் செயல்படவும் தடை தொடர்கிறது.

l திருமண நிகழ்வுகளில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் பங்கேற்கலாம்.

| நோய்க் கட்டுப்பாட்டுப்பகுதிகள் தவிர, அனைத்து பகுதிகளிலும்ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

l கூடுதலாக, தொழிற்பயிற்சி பெறும் மாணவர்கள் வேலைவாய்ப்பை கருத்தில் கெண்டு அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்கள் (ஐடிஐக்கள் மற்றும் தொழிற் பள்ளிகள்) தட்டச்சு - சுருக்கெழுத்து பயிற்சி நிலையங்கள், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவர்களுடன், சுழற்சி முறையில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்கலாம்.

l பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, புத்தக விநியோகம், பாடத்திட்ட தயாரிப்பு உள்ளிட்ட அனைத்து நிர்வாகப் பணிகளும் நடைபெற ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து பணியாற்ற வேண்டும்.

l கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறையில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் ஆகியவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். நொய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டதும் பொதுமக்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும்.

கரோனா விதிமுறைகள் குறித்ததொடர் விழிப்புணர்வை அனைத்துதரப்பினருக்கும் மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் ஏற்படுத்த வேண்டும். விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும். பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து முழு ஒத்துழைப்பு அளித்து, கரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவ வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE