சென்னை மக்களுக்குத் தட்டுப்பாடின்றி டிசம்பர் வரை குடிநீர் விநியோகம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை மக்களுக்குக் குடிநீர் பிரச்சினை ஏதும் இன்றி டிசம்பர் மாதம் வரை குடிநீர் விநியோகம் செய்யப்படும் என, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் இன்று (ஜூலை 17) எம்.ஆர்.சி.நகர், நகர நிர்வாக அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் நெம்மேலியில் செயல்பட்டுவரும் 100 எம்.எல்.டி. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகள் குறித்தும், புதியதாக நடைபெற்று வரும் 150 எம்.எல்.டி. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகள் குறித்தும் மேலும் பேரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

நெம்மேலியில் நடைபெற்றுவரும் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டப் பணிகளை வருகின்ற 2023-க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் பேரூரில் 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் புதிய திட்டத்தைத் தொடங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தவும் அறிவுறுத்தினார்.

பின்னர் அமைச்சர் பேரூரில் அமையவுள்ள 400 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட இடத்தையும், நெம்மேலியில் நடைபெற்றுவரும் 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கட்டுமானப் பணிகளையும் நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஏற்கெனவே அங்கு செயல்பட்டு வரும் 100 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:

"கிருஷ்ணா நதி நீர் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு 727.67 கன அடி நீர் வரத்தும், ஏரிகளில் 7,288 மில்லியன் கன அடி நீர் இருப்பும் உள்ளது. தற்போது நாளொன்றுக்கு 851 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னையில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. தற்பொழுதுள்ள நீர் இருப்பினைக் கொண்டு குடிநீர் பிரச்சினை ஏதும் இன்றி டிசம்பர் 2021 வரை குடிநீர் விநியோகம் செய்யப்படும்.

100 எம்எல்டி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் ரூ.914.42 கோடி மதிப்பில் கடந்த 23.02.2010 அன்று அப்போதைய தமிழக துணை முதல்வரும், தற்போதைய தமிழக முதல்வரின் திருக்கரங்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது இத்திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

ரூ.1259.38 கோடி மதிப்பீட்டில் நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல் நீரை எதிர்மறை சவ்வூடு முறையில் குடிநீராக்கும் திட்டப் பணி தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இத்திட்டம் ஏப்ரல் 2023-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இதன் மூலம் சுமார் ஒன்பது லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

மேலும், பேரூரில், ரூ.6,078 கோடி மதிப்பீட்டில், 400 எம்எல்டி உற்பத்தித் திறன் கொண்ட கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டம் செயல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டம் டிசம்பர் 2025-க்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 22 லட்சம் மக்கள் பயன்பெறுவார்கள்.

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக கழிவுநீர் குழாயில் தூர்வாரும் பணிகள் போர்க்கால அப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், மழைக் காலத்திற்கு முன்னர் மழைநீர் சேகரிப்பு திட்டத்தினைப் பொதுமக்களிடம் விவரித்துக் கட்டமைப்புப் பணிகளைத் துரிதமாகச் செயல்படுத்தி, மழைநீர் வீணாகாமல் கடலில் சென்று கலப்பதைத் தடுத்து நிலத்தடி நீரை உயர்த்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சியிலுள்ள 200 பணிமனைகளிலும் ஒரே சமயத்தில் இலவச குடிநீர் தர பரிசோதனையை 10 நாட்களுக்கு முடிக்குமாறும் இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயன்பாட்டிலுள்ள கிணற்று நீர், ஆழ்துளைக் கிணற்று நீர் மற்றும் சென்னைக் குடிநீரைப் பரிசோதனை செய்து பயன் பெறலாம்".

இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்