விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்துக: திருப்பத்தூர் ஆட்சியரிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை

By ந. சரவணன்

திருப்பத்தூரில் மாதாந்தர விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இன்று கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலச் செயலாளர் உதயகுமார் தலைமையில் சங்க நிர்வாகிகள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

''தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம், விவசாயிகள் குறைதீர் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு குறைதீர் கூட்டங்கள் கடந்த சில மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது கரோனா பரவல் வெகுவாகக் குறைந்துள்ளதால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விவசாயிகள் குறைதீர் கூட்டத்தை வரும் வாரத்தில் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், பாலாற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் தோல் தொழிற்சாலை நிறுவனங்கள் தோல் கழிவுகளைப் பாலாற்றில் கலந்து விடுகின்றன. இதனால், நீர் மாசடைந்துள்ளது. தோல் கழிவு கலந்த தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியாது என்பதால் இதுபோன்ற செயல்களைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாகத் திறக்க வேண்டும். நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்க, மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலையைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடு முழுவதும் இயற்கை விவசாயத்தை அதிகரிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அதற்கு ஏற்றாற்போல விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்குக் கொஞ்சம், கொஞ்சமாக மாறி வருகின்றனர். ஆனால், இதை ஊக்குவிக்க வேண்டிய வேளாண்மைத் துறை, ரசாயனம் கலந்து உரங்களை வாங்க வேண்டும் என விவசாயிகளைக் கட்டாயப்படுத்தி வருகிறது. ரசாயன உரங்களுக்கு பதிலாக இயற்கை உரங்களை வேளாண்மைத் துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கூட்டுறவுத் துறை மூலம் பயிர்க் கடன், விவசாயக் கடன், நகைக் கடன் வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூட்டுறவு வங்கிக்குச் சென்று பயிர்க் கடன் கேட்டால் பல காரணங்களைக் காட்டி விவசாயிகளை அலைக்கழிக்கின்றனர். எனவே, விவசாயக் கடன் பெற வங்கிகளில் எளிய நடைமுறைகளை அமல்படுத்த கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கு உத்தரவிட வேண்டும்.

பாலாறு- தென்பெண்ணை இணைப்புத் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும். பாலாற்றில் உள்ள தண்ணீரைச் சேமிக்க பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரத்தில், பாலாற்றில் இருந்து வீணாகக் கடலில் கலக்கும் தண்ணீரைப் பாசனத்துக்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அந்தக் கோரிக்கை மனுவில் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மனுவைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்